பலாலி விமானதள புனரமைப்பு - இந்தியாவிடம் இருந்து பறிக்கப்பட்டது ஏன்?
30 ஆடி 2012 திங்கள் 15:37 | பார்வைகள் : 10445
மீண்டும் ஒருமுறை பலாலி விமானதள அபிவிருத்தி விவகாரம் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான ஒரு இடைவிடாத சிக்கலாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறு ‘சிலோன் ருடே‘ ஆங்கில இதழில் உபுல் யோசப் பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது பத்தியின் முக்கிய பகுதிகளின் தொகுப்பு இது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சில நாட்கள் முன்னதாக, உள்ளூர் நாளிதழ் ஒன்று, தாக்கங்கள் பல நிறைந்த செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
பலாலி விமான நிலையத்தைப் புனரமைப்பதற்கான இந்திய உதவியை சிறிலங்கா நிராகரித்தது பற்றியதே அந்தச் செய்தி.
சிறிலங்காவின் குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சும், சிறிலங்கா விமானப்படையும் இணைந்து, அந்தத் திட்டத்தைக் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ள முடிவு செய்ததால் தான், இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டது.
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு, இந்தியாவிடம் சிறிலங்கா உதவி கோரியுள்ளதாக 2010 ஏப்ரல் 30ம் நாள், உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
2011 ஜனவரி 21ம் நாள், யாழ்ப்பாணத்தில் அனைத்துலக வர்த்தக கண்காட்சி திறப்பு நிகழ்வில் உரையாற்றிய இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, அதை உறுதிப்படுத்தியிருந்தார்.
பலாலி விமான நிலையத்தை குடியியல் விமான நிலையமாக மாற்றுவதற்கு இந்தியா உதவும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருதரப்பிலும் இருந்தும் இதுபற்றிப் பல அறிக்கைகள் வெளியிடப்பட்ட போதிலும், மேனனின் வருகைக்கு முன்னதாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் உதவி தேவையில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தியை யார் கையாள்வது என்ற கேள்வி நீண்டகாலத்துக்கு முன்னரே எழுந்து விட்டது.
இந்த விவகாரம் தொடங்கியது, 2002 – 2004 இற்கு இடைப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் காலத்தில் தான்.
பலாலி விமானதளத்தைப் புனரமைப்புச் செய்யவும், ஓடுபாதையைத் தரமுயர்த்தவும், இந்தியாவின் உதவியை ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார்.
அப்போதைய பாதுகாப்புச் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தனது புத்தகத்தில், சிறிலங்கா அரசாங்கம் சில பொறுப்புகளை நிறைவேற்றினால் நிபந்தனையுடன் உதவ இந்தியா முன்வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்தியாவின் மூன்று நிபந்தனைகளும் சிறிலங்காவின் இறையாண்மையை மீறும் வகையில் அமையக் கூடும் என்று தான் தெளிவாகப் புரிந்து கொண்டதாக அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்கள் மேலதிகமாக ஓடுபாதையில் பணியாற்ற ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அது சார்ந்த எந்தவொரு வேலையும் தம்மையே சார்ந்திருக்க வேண்டும் என்றும், எந்தவொரு அரசாங்கத்தையும் பரிசீலிக்க முன்னர் இந்தியாவே முதலாவது தெரிவாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பியதாக கூறியுள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது வேண்டுகோள், பலாலி ஓடுபாதையை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த எந்தவொரு மூன்றாவது நாட்டுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதாகும்.
அடுத்த நிபந்தனை, கோரிக்கை விடுத்தால் ஓடுபாதையை பயன்படுத்துவதற்கு இந்தியாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது.
எனினும், மூன்றாவது நிபந்தனை நாட்டின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ள முன்னாள் பாதுகாப்புச்செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.
“முதலாவது நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தியர்களிடம் எந்த மேலதிக வேலையையும் ஒப்படைப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நான் எனது அமைச்சரிடம் குறிப்பிட்டிருந்தேன்.
நான் அவருக்கு இரண்டாவது மூன்றாவது நிபந்தனைகள் குறித்து விளக்கமளித்தேன்.
அமைச்சரின் ஆலோசனையின் பேரில், நான் இந்த விடயம் தொடர்பாக நிருபம் சென்னுடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன்.
அப்போது பிராந்திய பூகோள நிலைமைகளின் அடிப்படையில் இரண்டாவது நிபந்தனையின் தன்மை குறித்த கவலையை அவரிடம் வெளிப்படுத்தினேன்.
மூன்றாவதுதரப்பு ஒன்று ஓடுபாதையைப் பயன்படுத்த அனுமதிகப்பட்டால், அது இந்தியாவின் நலன்களை மறைமுகமாகப் பாதிக்கும் என்று அவர் சொன்னார்.
அது உண்மையான நிலைமையே. அவரது கருத்தை நான் ஏற்றுக்கொண்டேன். அதற்குப் பதிலாக அவர் இன்னொரு வேண்டுகோளை விடுத்தார்.
சிறிலங்கா மூன்றாவது நாட்டின் மீது மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பலாலியைப் பயன்படுத்துவதற்கு தமது தரப்பில் எந்த எதிர்ப்பும் இல்லை என்றும், கூட்டு நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு முதலில் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிபந்தனை விடயத்தில் முடிவெடுக்கும் நிலைக்கு அப்பால் நான் இருந்தேன்.
இந்த விவகாரத்தில் புவியியல் கரிசனைகள், வெளிநாட்டு உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கம் எப்படிப்பட்ட கருத்தை வெளியிடும் என்று எனக்குத் தெரியவில்லை.
நிபந்தனைக்கு இணங்குவது எமது பூகோள அரசியல் நிலைப்பாடுகளுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் கவலை கொண்டிருந்தேன்.
இந்த விவகாரம் எனது அதிகாரத்தின் கீழ் இல்லாததால், அதுபற்றிப் பிரதமரை இந்தியத் தூதுவருடன் கலந்துரையாட வேண்டும் என்று அமைச்சரிடம் பரிந்துரை செய்தேன்.
இந்த கோப்பை கையளித்து விட்டு, எனது மேசைக்கு மீண்டும் வரும் என்று சில நாட்கள் காத்திருந்தேன்.
திலக் மாரப்பனவின் குறிப்பை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.”
“இந்த விடயம் தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடியுள்ளேன்.
இந்தியா இந்த ஓடுபாதை புனரமைப்பில் ஈடுபட வேண்டும், பலாலி விமான நிலையத்தை சிறிலங்கா மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.
இல்லாவிட்டால், சிறிலங்காவின் நிதியிலேயே அந்தப் பணியை மேற்கொள்ளலாம் என்றார்.
எவ்வாறாயினும், அவர் இதுபற்றி அமெரிக்காவில் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவார்.
அவர் திரும்பும் வரை நாம் காத்திருப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார் திலக் மாரப்பன.
"வேறு வகையில் சொல்வதானால், இந்த நிபந்தனைகளுடன் பலாலி விமான நிலைய புனரமைப்புப் பணியை இந்தியாவிடம் வழங்க வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கவில்லை.
சிலகாலம் கழித்தும் கூட பிரதமரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
நான் அவருடன் பேசினேன். ஆனால் அவரிடம் உறுதியான முடிவு இல்லை.
ஒரு இறையமையுள்ள நாட்டினால் ஏற்றுக்கொள்ள முடியாததாக - இந்தியாவின் கோரிக்கை இருந்தது என்பதை அந்தக் கலந்துரையாடலில் இருந்து என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது.
மறைமுகமாக சொல்வதானால் பிரதமர் 5 மில்லியன் டொலர்களுக்காக சிறிலங்காவின் இறைமையை விற்கத் தயாராக இல்லை.
2003 நவம்பர் 3ம் நாள் அப்போதைய சிறிலங்கா அதிபரால் நான் பதவி நீக்கப்பட்டதை அடுத்து, ரணில் விக்கிரமசிங்க அரசின் பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் முடிந்து போயின.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்பு அமைச்சை சந்திரிகா குமாரதுங்க எடுத்துக் கொள்வதில், இந்திய அரசாங்கம் செல்வாக்குச் செலுத்தி, தூபம்போட்டிருக்கலாம்” என்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலர்.
பாதுகாப்பு அமைச்சை சந்திரிகா பொறுப்பேற்றதும் 2004 ஜனவரி 1ம் நாள் சிறிலங்கா இராணுவத் தளபதி லயனல் பலகல்ல இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு பலாலி விமானதளத்தை தரமுயர்த்துவது குறித்து கலந்துரையாடினார்.
இந்தியாவும் உதவுவதாக இணங்கியுள்ளதாக 2004 ஜனவரி 2ம் நாள் வெளியான டெய்லி நியூஸ், செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், மீண்டும் ஒருமுறை பலாலி விமானதள அபிவிருத்தி விவகாரம் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான ஒரு இடைவிடாத சிக்கலாக உருவெடுத்துள்ளது.
அப்போது இந்தியாவின் கையில், இனப்போர் என்ற துருப்புச்சீட்டு இருந்தது.
இப்போது இந்தியா பலமான நிலையில் இல்லை. அதன் ஆதரவுடன் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் முடிந்து விட்டது.
இதனால், இந்தியா இப்போது பேரம்பேசும் கருவிகள் ஏதுமின்றி வெறும் கையுடன் நிற்கிறது.
- Puthinappalaka