Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் சிறுமிகளுக்கிடையேயான சண்டையில் ஆசிட் ஊற்றிய அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் சிறுமிகளுக்கிடையேயான சண்டையில் ஆசிட் ஊற்றிய அதிர்ச்சி சம்பவம்

21 ஆடி 2023 வெள்ளி 04:07 | பார்வைகள் : 14451


அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள டெட்ராய்ட் நகர் வெர்னர் ஆரம்பநிலை பள்ளி மைதானத்தில் குழந்தைகளிடையே சண்டை இடம்பெற்றுள்ளது.

அதன் போது 12-வயது சிறுமி மற்றொரு 11-வயதான சிறுமியின் மீது ஆசிட் ஊற்றியதாக தெரியவந்துள்ளது.

ஜூலை 9 ஆம் திகதி டியரா சம்மர்ஸ் எனும் 11 வயது சிறுமி தன் இளைய சகோதரிகளுடனும், உறவுக்கார சிறுமிகளுடனும் பூங்காவில் விளையாடி கொண்டிருந்தார்.

அவளை விட மூத்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமிக்கும், டியராவின் உறவுக்கார சிறுமி ஒருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அந்த அடையாளம் தெரியாத சிறுமிக்கு ஆயுதமாக அவள் தாயாரே திராவகத்தை கொண்டு வந்துள்ளார். அப்போது டியராவும் அவளுடன் வந்தவர்களும் புறப்பட்டு சென்று விட்டனர்.

ஆனால், தனது பர்ஸை பூங்காவில் தவற விட்டதால் அதனை எடுக்க டியரா மீண்டும் பூங்காவிற்கு திரும்பி வர நேர்ந்தது. அப்போது அந்த அடையாளம் தெரியாத சிறுமி டியரா மீது ஆசிட் வீசியுள்ளார்.

இதில் டியராவிற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை காயங்கள் உண்டாகியது. இதில் அவரின் கைகள், கால்கள் மற்றும் முதுகுப்புறம் ஆகியவற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

''வீசப்பட்ட 2 நிமிடங்களில் எரிய ஆரம்பித்தது.

நான் அலறி அழுதேன்'' என டியரா தெரிவித்தார்.

திராவகம் வீசிய அந்த 12 வயது சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தே ஒரு நடவடிக்கையில் ஈடுபடும் பெருங்குற்ற பிரிவில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

சுமார் ரூ.8,00,000 ($10,000) பிணையில் அவர் வெளியே வந்துள்ளார். மீண்டும் ஒகஸ்ட் 1 அன்று ஆஜர்படுத்தப்படுவார்.

டியராவின் மருத்துவ செலவிற்காக "கோ ஃப்ண்ட் மீ" சமூக வலைதளத்தில் நிதியுதவி கோரியுள்ள அவளின் பாட்டி டெப்ரா கோல்ஸ்டன் இதுகுறித்து கூறுகையில்,

டியராவிற்கு முதுகிலிருந்து கீழ்பகுதி வரை கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் நல மருத்துவமனையில் அவள் 4 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றாள்.

அத்துடன்  அவள் உயிருடன் இருப்பதே அதிசயம். அவள் உடல்நிலை சரியாகும் வரை அவளுக்கு நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறதாகவும் தெரிவித்தார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்