Paristamil Navigation Paristamil advert login

பூண்டு கத்தரிக்காய் புளிக்குழம்பு

பூண்டு கத்தரிக்காய் புளிக்குழம்பு

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9734


 பொதுவாக அனைத்து காலத்திலும் கிடைக்கக்கூடிய ஒரு காய்கறி தான் கத்தரிக்காய். இந்த கத்தரிக்காயை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். மேலும் பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இரண்டு காய்கறிகளையும் கொண்டு அருமையான முறையில் ஒரு புளிக்குழம்பு செய்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. சொல்லப்போனால், இந்த புளிக்குழம்பு ஒரு அமிர்தம் போன்று இருக்கும். எனவே இன்று மதியம் பூண்டு கத்தரிக்காய் புளிக்குழம்பை செய்து சாப்பிடுங்கள். அதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்: 

 

கத்தரிக்காய் - 4 (நீளமாக நறுக்கியது) 

பூண்டு - 20 பற்கள் 

சின்ன வெங்காயம் - 15 (தோலுரித்து, நறுக்கியது) 

புளி - ஒரு எலுமிச்சை அளவு 

வத்தக்குழம்பு பொடி - 2 டீஸ்பூன் 

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

கொத்தமல்லி - சிறிது 

உப்பு - தேவையான அளவு 

நல்லெண்ணெய் - தேவையான அளவு 

வத்தக்குழம்பு பொடிக்கு... வர மிளகாய் - 6 

மல்லி - 2 டேபிள் ஸ்பூன் 

கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன் 

துவரம் பருப்பு - 4 டீஸ்பூன் 

மிளகு - 1 டீஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன்

 

செய்முறை: 

 

முதலில் புளியை 2 கப் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வத்தக்குழம்பு பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொண்டு, பின் அவை அனைத்தையும் குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 

பின்பு ஊற வைத்துள்ள புளியை நன்கு பிசைந்து, நீரை வடிகட்டி, அந்த நீரில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வத்தக்குழம்பு பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 

பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பூண்டு சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பின் புளித் தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்கு சுண்ட கொதிக்க விட வேண்டும். 

காயானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறினால், சூப்பரான பூண்டு கத்தரிக்காய் புளிக்குழம்பு ரெடி!!! 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்