தேங்காய் புளிக் குழம்பு
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9774
பொதுவாக புளிக் குழம்பில் காய்கறிகளைத் தான் சேர்த்து சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் தேங்காய் புளிக் குழம்பில் காய்கறிகளை சேர்க்காமல், அதற்கு பதிலாக தேங்காயை சேர்த்து செய்தால், அதன் சுவையே தனி தான். பெரும்பாலும் இந்த குழம்பை கிராமப் பகுதிகளில் அதிகம் செய்து சாப்பிடுவார்கள். இப்போது அந்த தேங்காய புளிக் குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, குழம்பு எப்படி இருந்தது என்று எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1/2 மூடி (நீளமாகவோ அல்லது பொடியாகவோ நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்தது)
பூண்டு - 15 பல் (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நீரில் ஊற வைத்துள்ள புளியை கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியையும் அத்துடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும் .
குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான தேங்காய் புளிக் குழம்பு ரெடி!!!