Paristamil Navigation Paristamil advert login

மசாலா பணியாரம்

மசாலா பணியாரம்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9667


 வீட்டில் எப்போதும் இட்லி சுட்டு போர் அடித்திருந்தால், அப்போது அந்த இட்லி மாவைக் கொண்டு சூப்பரான முறையில் பணியாரம் செய்து சாப்பிடலாம். அதிலும் இதனை காலை உணவாக செய்து சாப்பிடுவது மிகவும் எளிது. குறிப்பாக பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ரெசிபியும் கூட. எனவே காலையில் தாமதமாக எழுந்தால், அப்போது பதட்டப்படாமல், வீட்டில் இட்லி மாவு இருந்தால், அதனை மசாலா பணியாரமாக செய்துக் கொடுக்கலாம். அந்த மசாலா பணியாரத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!! 

தேவையான பொருட்கள்: 

இட்லி மாவு - 2 கப் 

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது) 

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 

துருவிய தேங்காய் - 1/2 கப் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை ஊற்றி, அதில் எண்ணெயை தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்து, கலந்து வைத்துள்ள மாவை பணியாரங்களாக ஊற்றி, பின் அவற்றின் மேல் லேசாக எண்ணெய் ஊற்றி, மூடி போட்டு 2-3 நிமிடம் வேக வைத்து திறந்து, திருப்பிப் போட்டு வெந்ததும், அவற்றை தட்டில் வைக்க வேண்டும். 

இதேப் போன்று அனைத்து மாவையும் பணியாரங்களாக சுட்டுக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான மசாலா பணியாரம் ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் தொட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்