மரக்கறி தோசை
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10000
காலையில் திடீரென்று தோசை சாப்பிட வேண்டுமென்று ஆசை, ஆனால் தோசை மாவு இல்லையே என்று வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள். ஆம், எளிமையான மற்றும் ஆரோக்கியமான முறையில் ஒரு சூப்பரான தோசை ரெசிபியை இங்கு கொடுத்துள்ளோம். அது வேறொன்றும் இல்லை, வீட்டில் இருக்கும் மைதா, அரிசி மாவு போன்றவற்றுடன், சிறிது காய்கறிகளை போட்டு, எளிய முறையில் தோசை செய்யலாம். இப்போது அந்த மரக்கறி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மைதா - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
எண்ணெய் - 2 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பட்ட அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை குறைந்தது 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
10 நிமிடம் ஆனப் பின்பு, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தீயை குறைத்து சூடேற்ற வேண்டும். கல்லானது சூடானதும், அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, தோசை போன்று தேய்த்து, தட்டு கொண்டு மூடி, 1 நிமிடம் வேக வைத்து, திருப்பி போடாமல் எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான மரக்கறி தோசையானது ரெடி!!! இதேப் போன்று அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும். குறிப்பாக இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.