Paristamil Navigation Paristamil advert login

வறுத்த தேங்காய் வெல்லக் கொழுக்கட்டை

வறுத்த தேங்காய் வெல்லக் கொழுக்கட்டை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9804


 கணபதிக்கு கொழுக்கட்டை என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக கொழுக்கட்டையை வேக வைத்து தான் செய்வோம். ஆனால் மகாராஷ்டிராவில் கொழுக்கட்டையை பொரித்து, விநாயகருக்கு படைப்பார்கள். எனவே இந்த வருடம் விநாயகருக்கு எப்போதும் செய்யப்படும் கொழுக்கட்டை போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக செய்து படைக்கலாமே! சரி, இப்போது மகாராஷ்டிரா ஸ்டைல் தேங்காய் வெல்ல கொழுக்கட்டையைப் பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
கோதுமை மாவு - 2 கப் 
மைதா மாவு - 1/2 கப் 
நாட்டுச்சர்க்கரை - 1 கப் 
தேங்காய் - 1 கப் (துருவியது) 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
நெய் - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) 
 
செய்முறை: 
 
முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்ற காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து, படத்தில் காட்டியவாறு செய்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். 
 
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான தேங்காய் வெல்லக் கொழுக்கட்டை ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்