Paristamil Navigation Paristamil advert login

வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ ரசம்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9846


 ரசத்தில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் அனைவரும் செய்வது புளி ரசம், தக்காளி ரசம் தான். ஆனால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ரசம் செய்ய நினைத்தால், வேப்பம்பூ ரசத்தை செய்து சாப்பிடுங்கள். இந்த ரசம் உடலில் உள்ள பூச்சிகள், புழு போன்றவற்றை அழித்துவிடும். மேலும் இதனை மதிய வேளையில் உணவிற்கு முன் சூப்பாகவும் குடிக்கலாம். சரி, இப்போது அந்த வேப்பம்பூ ரசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம். 

 
தேவையான பொருட்கள்: 
 
புளி - 1 எலுமிச்சை அளவு 
துவரம் பருப்பு - 1/2 கப் 
மிளகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
வர மிளகாய் - 2 
மல்லி - 1 டீஸ்பூன் 
தக்காளி - 1 (நன்கு கனிந்தது) 
கொத்தமல்லி - சிறிது 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வேப்பம்பூ - 1 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
 
செய்முறை: 
 
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், வேப்பம்பூவை போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை தண்ணீரில் போட்டு உப்பு ஊற வைத்து, பின் நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
அடுத்து துவரம் பருப்பை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். குக்கரில் உள்ள விசிலானது போனதும், குக்கரை திறந்து, பருப்பை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் மிளகு, சீரகம், வர மிளகாய் மற்றும மல்லி சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 
 
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, புளி தண்ணீர், அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். 
 
பிறகு தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதி லவறுத்து வைத்துள்ள வேப்பம்பூ மற்றும் கொத்தமல்லியை தூவி இறக்கி, அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். 
 
இதனால் வேப்பம்பூவில் உள்ள கசப்பு அதிகமாக இறங்காமல் இருக்கும். இறுதியில் கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சேர்த்தால், சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்