முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10021
முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய பல சத்துக்கள் கிடைக்கும். ஏனெனில் முட்டைக்கோஸில் உடல்நல நன்மைகள் ஏராளம் உள்ளது. மேலும் இதன் விலை மலிவாக இருப்பதால், வாரத்திற்கு 2 முறை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் முட்டைக்கோஸை பருப்புடன் சேர்த்து கூட்டு போன்று செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டலாம். இப்போது அந்த முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
தக்காளி - 1-2 (நறுக்கியது)
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய், சோம்பு, சீரகம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பருப்பை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பை வேக வைக்க வேண்டும்.
பருப்பானது ஓரளவு வெந்ததும், அதில் முட்டைக்கோஸை சேர்த்து, பருப்பு நன்கு மென்மையாக மாறும் வரை வேக வைக்க வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், மற்றொரு அடுப்பில் உள்ள பருப்பு கலவையை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.