மிளகு பன்னீர்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10062
பன்னீர் ரெசிபிக்களில் எத்தனை இருந்தாலும், அதில் மிளகு பன்னீர் ரெசிபியின் சுவைக்கு ஈடாக வேறு எந்த ரெசிபியும் இருக்காது. அந்த அளவில் பன்னீருடன் மிளகை சேர்க்கும் போது, அதன் சுவை அலாதியாக இருக்கும். இப்போது அந்த மிளகு பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். அதை முயற்சித்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 400 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
வெஜிடேபிள் ஆயில் - 5 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 2
மிளகு - 4-5
கிராம்பு - 3-4
பிரியாணி இலை - 2
தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 3 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1/4 கப்
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, மிளகு, கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அந்த வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் தயிரை நன்கு அடித்து ஊற்றி கிளறி விட வேண்டும்.
பிறகு மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்னர் பன்னீர், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி பிரட்டி, வாணலியை மூடி 10 நிமிடம் குறைவான தீயிலேயே கொதிக்க விட வேண்டும். பின் மிளகு தூள் மற்றும் பிரஷ் க்ரீம் சேர்த்து, 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
1 நிமிடம் கலவையானது கொதித்ததும், அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.