கடலை மாவு பூரி
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9528
பொதுவாக கடலை மாவு கொண்டு பஜ்ஜி, போண்டா என்று தான் செய்வோம். ஆனால் கடலை மாவைக் கொண்டு பூரி செய்யலாம் என்பது தெரியுமா? அதிலும் இந்த மாவைக் கொண்டு செய்யும் பூரியானது மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் இது விரைவில் செரிமானமாகக்கூடியது. மேலும், இது காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற ஒரு காலை உணவு. சரி, இப்போது அந்த கடலை மாவு பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/2 கப்
மைதா - 1 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மைதா, சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும் 4-5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை சிறு உருண்டைகளாக்கி, பூரி போன்று தேய்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கடலை மாவு பூரி ரெடி!!!