முட்டைக்கோஸ் மிளகு சூப்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9633
உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு அருமையான பானம் தான் சூப். இத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இப்போது அதில் ஒன்றான முட்டைக்கோஸ் மிளகு சூப்பை தான் பார்க்கப் போகிறோம். குறிப்பாக முட்டைக்கோஸ் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால், இதமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். சரி, இப்போது அந்த முட்டைக்கோஸ் மிளகு சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சோள மாவு - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் காய்கறிகளை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளான முட்டைக்கோஸ், கேரட் மற்றும் வெங்காயம் சேர்த்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். விசிலானது போனதும், குக்கரை திறக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், குக்கரில் உள்ளவற்றை வாணலியில் ஊற்றி, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் சோள மாவை கட்டி சேராதவாறு தூவி நன்கு கிளறி, கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் மிளகு சூப் ரெடி!!!