மாங்காய் ரசம்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9644
மாங்காய் சீசன் என்பதால் அனைவரது வீட்டிலும் மாங்காய் நிச்சயம் இருக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு சட்னி, சாம்பார், குழம்பு என்று மட்டுமின்றி, ரசம் கூட வைக்கலாம். இங்கு அந்த மாங்காய் ரசத்தின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரசம் புளிப்புச் சுவையுடன் ருசியாக இருக்கும். இப்போது அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1 (நறுக்கியது, வேக வைத்தது)
வெல்லம் - 1 துண்டு
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2-3
தேங்காய் - 1 கப் (துருவியது)
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
தண்ணீர் - 1 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் வேக வைத்த மாங்காயில் இருந்து சாற்றினை வடிகட்டி, அதனை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து, பின் குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, காய்ந்ததும் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி, பின் இறக்கி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும்.
பின் மாங்காய் நீரை ஊற்றி, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், பவுடர் மற்றும் வெல்லத்தை சேர்த்து கலந்து கொதிக்க விட வேண்டும். இறுதியில் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், சுவையான மாங்காய் ரசம் ரெடி!!!