ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்ற அக்., 7 வரை அவகாசம் நீட்டிப்பு
30 புரட்டாசி 2023 சனி 13:24 | பார்வைகள் : 3352
ரூ.2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசத்தை அக்.,07 வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுவரை புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் 96 சதவீதம் திரும்பி வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக, மத்திய ரிசர்வ் வங்கி கடந்த மே19ம் அறிவித்தது. அதேநேரம், மக்கள் தங்கள் வசம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள செப்., 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் படி, இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது.
இந்நிலையில், ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவதற்கான அவகாசம் அக்.,07 வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டது தொடர்பாக நடந்த ஆய்வு மற்றும் பலரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசத்தை நீட்டிக்கப்படுவதாகவும், புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் 96 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டது. இன்னும் 4 சதவீதம் தான் வர வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அக்., 08 முதல் ரூ.2 ஆயிரம் நோட்டை பரிமாற்றத்திற்கு பயன்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளது.