Paristamil Navigation Paristamil advert login

காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே மோதல் முற்றுகிறது! இண்டியா கூட்டணியில் குழப்பம்

காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே மோதல் முற்றுகிறது!  இண்டியா கூட்டணியில் குழப்பம்

30 புரட்டாசி 2023 சனி 20:40 | பார்வைகள் : 2540

பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான சுக்பால் சிங் கைரா, போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையிலான மோதல் முற்றியுள்ளது. ''எங்களுக்கு அநீதி இழைத்தால், நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்,'' என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்; இது, 'இண்டியா' கூட்டணியிலும் பிளவை ஏற்படுத்தும் அளவுக்கு தேசிய அளவில் எதிரொலிக்க துவங்கி உள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்துவதற்காக, காங்கிரஸ் தலைமையில், 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டியா' கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூ., - ஆம் ஆத்மி உட்பட பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் கைகோர்த்துஉள்ளன.

கருத்து வேறுபாடு

இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற மூன்று கூட்டங்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு கூட்டங்களிலும், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு வலுத்து வருகிறது. குறிப்பாக, ஆம் ஆத்மியை சமாளிக்க முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது.

புதுடில்லி, பஞ்சாப் மற்றும் குஜராத்தில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விவகாரத்தில், காங்., - ஆம் ஆத்மி இடையே இணக்கமான உடன்பாடு ஏற்படாமல் சிக்கல் நீடித்து வருகிறது.

பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்தது, காங்., தலைவர்களை கொதிப்படைய செய்துஉள்ளது.

ஏற்கனவே பல்வேறு குழப்பங்களுடன் இண்டியா கூட்டணி தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பஞ்சாப் காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான சுக்பால் சிங் கைரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 2015ல் இவர் மீது போடப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

''இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதன் அடிப்படையில் சுக்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், சட்டம் எல்லாருக்கும் ஒன்று தான்,'' என, பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங் தெரிவித்தார்.

சுக்பால் சிங்கின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. மாநிலத்தின் முக்கிய பிரச்னைகளை திசை திருப்புவதற்காக, எதிர்க்கட்சியை ஆம் ஆத்மி மிரட்டுகிறது. இந்த விவகாரத்தில் முறையான தீர்வு காண நாங்கள் உறுதியுடன் போராடுவோம்,'' என, பஞ்சாப் காங்., தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கை குறித்து உடனடியாக கூடி பேசிய பஞ்சாப் காங்., தலைவர்கள், மாநில கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைக்கும்படி மனு அளித்துள்ளனர்.

காங்., தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி பதில் அளித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த ஜக்தர் சிங் சங்கேரா கூறுகையில், ''மாநிலத்தில் மதிப்பை இழந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம்,'' என, தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில், அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள், தேசிய அளவில் எதிரொலித்து, இண்டியா கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

கைது நடவடிக்கை

ஆம் ஆத்மி - காங்., இடையிலான இந்த வார்த்தை மோதல் குறித்து காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

பெங்களூரில் இருந்து நேராக சத்தீஸ்கர் வந்துவிட்டேன். எனவே, இந்த விவகாரம் குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை.

விவகாரம் எதுவானாலும், அநியாயம் செய்பவர்கள் நீண்ட காலம் வாழ முடியாது. எவரேனும் எங்களுக்கு அநீதி இழைத்தால், நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து, இண்டியா கூட்டணிக்குள் ஆம் ஆத்மி - காங்., இடையிலான மோதல் முற்றியுள்ளது.

சச்சரவு தவிர்க்க முடியாதது

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதாவது:இந்தாண்டு இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. தேர்தல் நெருங்கும் மாநிலங்களில் கூட்டணிக்குள் சச்சரவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதுபோன்ற நேரங்களில் சமரசம் செய்ய, நடுநிலையான தலைவர்களை அனுப்பி வைப்போம்.தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். மும்பை திரும்பியதும், காங்., தலைவர்களுடன் இதுகுறித்து பேசி தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்