புளி உப்புமா
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10048
புளி உப்புமா என்பது புளி சாதம் போன்றது தான். பொதுவாக உப்புமா என்றால் வெள்ளை ரவை அல்லது கோதுமை ரவை கொண்டு செய்வோம். ஆனால் புளி உப்புமாவானது அரிசி மாவைக் கொண்டு செய்யப்படுவதாகும். மேலும் இது மிகவும் சுவையுடன் இருப்பதோடு, மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறும் இருக்கும். இங்கு அந்த புளி உப்புமாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - தேவையான அளவு
வரமிளகாய் - 2-3
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் புளியை 2 கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் புளித் தண்ணீரில் அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் தேவையான அளவி உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய், வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைத்துள்ள அரிசி மாவை ஊற்றி, கலவை சற்று கெட்டியாகும் வரை கிளறி இறக்கினால், புளி உப்புமா ரெடி!!!