La Courneuve : காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு!
2 ஐப்பசி 2023 திங்கள் 16:32 | பார்வைகள் : 6832
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தப்பிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை La Courneuve (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Paul Verlaine வீதியில் காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது Peugot 5008 மகிழுந்து ஒன்று பயணிப்பதை பார்த்துள்ளனர். குறித்த மகிழுந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நிறுத்துமாறு பணித்துள்ளனர். ஆனால் மகிழுந்து காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அங்கிருந்து வேகமாக தப்பிச் செல்ல முற்பட்டது. இதனால் காவல்துறையினர் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றனர்.
மகிழுந்து நிற்காமல் தொடர்ந்து பயணிக்க, அதனை நிறுத்துவதற்காக மகிழுந்தை நோக்கி காவல்துறையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் சுடப்பட்டு மகிழுந்து நிறுத்தப்பட்டது. மகிழுந்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில், நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் எவரும் காயமடையவில்லை.
மேற்படி துப்பாக்கிச்சூடு தொடர்பில் காவல்துறையினரைக் கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.