அதிக வரி திணிப்பு - கவலையில் இல் து பிரான்ஸ் சுற்றுலாத்துறை!
3 ஐப்பசி 2023 செவ்வாய் 07:15 | பார்வைகள் : 6477
இல் து பிரான்ஸ் சுற்றுலாத்துறை அதிக வரி ஏய்ப்பினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை மீதி விதிக்கப்படும் வரி 2024 ஆம் ஆண்டில் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உணவகங்கள், தங்குமிடங்களுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்று நட்சத்திர விடுதி ஒன்றில் தங்குவதற்கு இரண்டு யூரோக்கள் (1.88 யூரோக்கள்) வரி விதிக்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டில் இது 6 யூரோக்களாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இல் து பிரான்சுக்கான சுற்றுலாத்துறை ஏற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளைக் காண 15 மில்லியன் வெளிநாட்டவர்கள் பரிசுக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரி அதிகரிப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மேலும் தெரிவித்துள்ளனர்.
இல் து பிரான்ஸ் சுற்றுலாத்துறை பிரெஞ்சு பொருளாதரத்தில் 8 சதவீதமான வருவாயை ஏற்படுத்தி தருகிறது. 2 மில்லியன் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறது. வரி அதிகரிப்பினால் சுற்றுலாப்பயணிகளின் வருகை பாதிக்கப்படும் எனவும், நவிகோ பயண அட்டை விலை அதிகரிப்பு ஒரு பக்கம், வரி அதிகரிப்பு ஒருபக்கம் என சுற்றுலாத்துறையின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.