காலிஃப்ளவர் மசாலா தோசை
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9698
மசாலா தோசையிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் உருளைக்கிழங்கு மசாலா தோசைக்கு அடுத்தப்படியாக சுவையாக இருப்பது என்றால் அது காலிஃப்ளவர் மசாலா தோசை தான். இந்த தோசையானது காலை வேளையில் செய்து சாப்பிட ஏற்றது. மேலும் இந்த தோசையை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி, இப்போது அந்த காலிஃப்ளவர் மசாலா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - தேவையான அளவு
காலிஃப்ளவர் - 2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
முந்திரி - 10 (பேஸ்ட் செய்து கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் காலிஃப்ளவரை போட்டு நன்கு காலிஃப்ளவரை வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி காய்ந்ததும், சோம்புத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் தக்காளி சேர்த்து நன்கு தக்காளியை வதக்க வேண்டும்.
பிறகு அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டி, 2-3 நிமிடம் மசாலா நன்கு கெட்டியாகும் வரை கிளறி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தோசை ஊற்றி, மேலே சிறிது எண்ணெய் ஊற்றி, தோசையை எடுக்கும் நேரத்தில் அதனுள் காலிஃப்ளவர் மசாலாவை வைத்து மடித்து பரிமாறினால், காலிஃப்ளவர் மசாலா தோசை ரெடி!!!