முல்லைத்தீவு நீதிபதி விலகல் - சுயாதீன விசாரணை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்
4 ஐப்பசி 2023 புதன் 06:17 | பார்வைகள் : 3065
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும். எனவே இவ்விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்றைய தினம் பாராளுமன்றில் முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு கூறினார்.
“முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும். இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினையாகும்.
முல்லைத்தீவு நீதிபதி டி.சரவணராஜாவிற்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்படுகின்றது.
இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால்,சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு அறிவிக்கவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.