பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமை பிரான்சுக்கு அழைத்து வர தற்காலிக தடை!
4 ஐப்பசி 2023 புதன் 07:07 | பார்வைகள் : 4745
நீதிமன்ற விசாரணைகளுக்கான பெல்ஜியத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமினை பிரான்சுக்கு அழைத்து வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை பெல்ஜியத்தின் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நவம்பர் 13 (2015) பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல்சலாமுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரெஞ்சு நீதிபதிகள் சிறைத்தண்டனை விதித்தனர். பெல்ஜியத்தில் இருந்து வருகை தந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் பெல்ஜியத்துக்குள் தப்பி ஓடிய குறித்த பயங்கரவாதியை பிரெஞ்சு-பெல்ஜிய அதிரடிப்படையினர் இனைந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், அண்மையில் பிரெஞ்சுச் சிறைச்சாலையில் இருந்து பெல்ஜியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தான். இம்மாதம் 12 ஆம் திகதி மீண்டும் பிரான்சுக்கு அழைத்துவரப்பட இருந்த நிலையில், தற்போது பெல்ஜிய நீதிபதிகள் மேலதிக விசாரணைகளுக்காக அப்தெல்சலாமை பிரான்சுக்கு அழைத்து வர தடை விதித்துள்ளனர்.
**
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில், ஏழு பயங்கரவாதிகள் உட்பட 137 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 416 பேர் காயமடைந்திருந்தனர். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தது.