பிரான்சில் அதிகரித்து வரும் அபாயகரமான உடல் பருமன். 'l’Inserm' சுயாதீன சுகாதார அமைப்பு.
4 ஐப்பசி 2023 புதன் 07:22 | பார்வைகள் : 3715
பிரான்சில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இங்கு வாழும் மக்கள் தொகையில் 43.7% சதவீத மக்கள் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையைவிட இருமடங்கு அதிகமான எடைய கொண்ட பருமன் உள்ளவர்களாக உள்ளனர். 17% சதவீதமானவர்கள் நான்கு மடங்கு அதிகமான எடையை கொண்டுள்ளனர், சிறுவர்களில் 6 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்களில் 20% சதவீதமானவர்கள் அதிக உடல் பருமன் உள்ளவர்களாக உள்ளனர் என 'l’Inserm' அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைக்கு பல காரணங்களை சுயாதீன சுகாதார அமைப்பு முன்வைக்கிறது. ஒன்று அரசுக்கு மக்கள் மீது கவனம் இல்லை, மக்களுக்கும் தங்கள் மீது அக்கறை இல்லை, அடுத்து பெருகிவரும் துரித உணவகங்கள், அவைகளை வீடுவரை கொண்வந்து தரும் தொழில்கள், ஆசை ஊட்டும் விளம்பரங்கள், பொதி செய்யப்பட உணவுகளில் கலக்கப்படும் கெமிக்கல்ஸ், உடல் பயிற்சி இன்மை, என பல உண்டு என்கிறது l’Inserm.
துரித உணவகங்களின் உரிமங்களை அரசு மட்டுப்படுத்த வேண்டும், உணவு விளம்பரங்களை, காட்சிப் படுத்துதலை குறைக்க வேண்டும், பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் உடல் பயிற்சிக் கூடங்களை அதிகரிக்க வேண்டும், மக்களுக்கு உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.