Mont-Saint-Michel பகுதிக்கு படையெடுத்துள்ள நுளம்புகள்.
4 ஐப்பசி 2023 புதன் 15:10 | பார்வைகள் : 5697
பிரான்சில் Normandie பகுதில் உள்ள கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் வடக்கே அமைந்துள்ள ஒரு அதியசத் தீவு Mont-Saint-Michel. சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த இந்த தீவின் மலையில் உள்ள புனித மிக்கேல் தேவாலயத்தை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், பாடசாலை கல்விச் சுற்றுலா மாணவர்களும் சென்று வருவது வழக்கம்.
குறித்த Mont-Saint-Michel பகுதி ஒரு சதுப்புநிலம் இங்கு குளிர்காலத்தில் நுளம்புகள் இருப்பது சாதாரணமான விடையம்தான், ஆனால் இவ்வாண்டு நுளம்புகள் படையெடுத்து வந்ததுபோல் மிகவும் அதிகமாக உள்ளது என அங்கு பணிபுரியும் ஊழியர்களும், அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.
ஒரு பாடசாலையின் மாணவர்கள் சென்ற கல்விச் சுற்றுலா ஆசிரியர் தெரிவிக்கும் போது "நாங்கள் மலையை சுற்றி பார்த்த பின்னர் சில வேலைத் திட்டங்களை அங்கு செய்ய முயற்சித்தோம், ஆனால் நுளம்புகள் தொல்லை தாங்க முடியாமல் மீண்டும் பேரூந்தில் ஏறிச் சென்று விட்டோம் " என தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அங்கு உணவகம் நடத்தும் உரிமையாளர் தெரிவிக்கையில் "இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் வளைகுடாவில் உள்ள நுளம்புகள் இங்கு குடியேறுவது இது முதல் முறை அல்ல, ஆனால் இவ்வாண்டு மிக அதிகமாக உள்ளது. இம்முறை கோடைகாலத்தில் ஒரு நுளம்பு கூட இங்கு இருக்கவில்லை" என தெரிவிக்கிறார்.
தங்குமிடம் உரிமையாளர் தெரிவிக்கையில் "நுளம்புகளின் அதிகமான தாக்கம் இங்கு இருப்பதால் வாடிக்கையாளர்கள் வரவு குறைந்து செல்லும் அபாயம் உண்டு" என தெரிவித்துள்ளார்.
தாங்கள் இதற்கான உடனடி நடவடிக்கையை எடுக்க உள்ளதாக நகரசபை தெரிவித்திருக்கிறது.