சத்தான... ஓட்ஸ் இட்லி
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9765
காலை வேளையில் சாப்பிடும் இட்லிகளில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் கொண்டு செய்யப்படும் இட்லி. உண்மையிலேயே இந்த ஓட்ஸ் இட்லி எடையை குறைப்பதுடன், உடலின் வலிமையை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உளுத்தம் பருப்பு சேர்த்து செய்வதால். குறிப்பாக இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
பேச்சுலர்கள் கூட இந்த ஓட்ஸ் இட்லியை காலை வேளையில் முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த சத்தான ஓட்ஸ் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் ஓட்ஸ் மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு, நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொண்டு, அத்துடன் உப்பு, பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை மூடி வைத்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, அந்த மாவில் ஊற்றி கிளறி விட வேண்டும்.
பிறகு இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வேண்டும். நீரானது கொதிப்பதற்குள், இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி மாவை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதற்குள் இட்லி தட்டை வைத்து, மூடி வைத்து 8-10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஓட்ஸ் இட்லி ரெடி!!!