இஸ்ரேல் எல்லையில் போர் பதற்றம்....
7 ஐப்பசி 2023 சனி 10:22 | பார்வைகள் : 4043
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் திடீரென்று கடுமையான ராக்கெட் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
போருக்கு தயார் என இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் இருந்து திடீரென்று தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் போராளிகள், சில நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை வீசியதாக கூறுகின்றனர்.
இது எங்கள் தாக்குதல்களின் தொடக்கம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை மணி ஒலிக்கவிடப்பட்டதுடன், நாட்டின் பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் அரசாங்கத்தால் தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் ஹமாஸ் போராளிகள் நாட்டுக்குள் ஊடுருவும் வாய்ப்புகள் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் பாதுகாப்பு தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை உடனடியாக முன்னெடுக்க இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, ஹமாஸ் தனது நடவடிக்கைகளுக்கு பெரும் விலை கொடுக்க நேரிடும் என்றும் அவரது அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, ஹமாஸைச் சேர்ந்த டசின் கணக்கான ஆயுததாரிகள் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராக்கெட் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் தங்குமிடங்களுக்கு அருகில் இருக்குமாறும், காசா பகுதிக்கு அருகில் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் இஸ்ரேல் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
2007ல் காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளிகள் பல போர்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது காசா பகுதி தொழிலாளர்களுக்கு இஸ்ரேல் எல்லையை மூடியுள்ள நிலையிலேயே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை நடந்த மோதலில் 247 பாலஸ்தீனியர்கள், 32 இஸ்ரேலியர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.