ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ! கூட்டணி மலர வாய்ப்புள்ளதா?
10 ஐப்பசி 2023 செவ்வாய் 08:07 | பார்வைகள் : 3839
முதல்வர் ஸ்டாலினை, பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று சந்தித்துப் பேசினார்.சட்டசபை கூட்டத் தொடர் நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது.
அதற்கு முன், காலை 9:30 மணியளவில் தலைமை செயலகம் வந்த அன்புமணி, முதல்வர் ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்தார்.
அப்போது, பா.ம.க., சட்டசபை குழுத் தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச்செயலர் ஏ.கே.மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் பாலு உடனிருந்தனர்.
இருபது நிமிடங்களுக்கு மேல் நீடித்த சந்திப்பின்போது, அன்புமணிக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பின், அன்புமணி அளித்த பேட்டி:
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, தி.மு.க., ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது.
இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருந்தாலும், சரியான தரவுகளை சேகரித்து, அதன் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவுகளை சேகரிக்க, 15 நாட்கள் போதுமானது. ஆனால், ஒன்பது மாதங்களாகியும் தரவுகள் கிடைக்கவில்லை என, அரசு கூறுகிறது.
அதை ஏற்க முடியாது. இது தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறு முறை கடிதம் எழுதியுள்ளார்;
10 முறை தொலைபேசியில் பேசியுள்ளார். இன்றைய சந்திப்பின்போதும், ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தை முதல்வரிடம் வழங்கி உள்ளோம்.
இது தொடர்பாக நானும் முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். இருப்பினும், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை, தமிழக அரசு கொண்டு வருமா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
எனவே தான் குழுவாக முதல்வரை சந்தித்து, நடப்பு சட்டசபை கூட்டத்திலேயே, சட்டம் கொண்டு வர வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.