ஆறு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் - பரிசில் 20,000 பேர் பங்கேற்பு!
14 ஐப்பசி 2023 சனி 05:00 | பார்வைகள் : 3584
நேற்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஊதிய உயர்வு கோரி பல்வேறு துறைசார்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, பிற்பகலின் பின்னர் ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றன.
மே தின ஆர்ப்பாட்டத்தை தவிர்த்து, கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னர் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது. நாடு முழுவதும் 230 போராட்டங்கள் இடம்பெற்றன. தலைநகர் பரிசில் பிற்பகல் 2 மணிக்கு Place d'Italie சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி Place Vauban பகுதியில் சென்று நிறைவடைந்தது. இதில் மொத்தமாக 20,000 பேர் பங்கேற்றிருந்தனர்.
மர்செய் (Marseille) நகரில் 2,100 பேரும், Toulouse நகரில் 2,000 பேரும் பங்கேற்றிருந்தனர்.
நாடு முழுவதும் 300,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.