நீதிபதி டி.சரவணராஜாவிடம் விசாரணை
18 ஐப்பசி 2023 புதன் 08:44 | பார்வைகள் : 4351
மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நீதிபதி டி.சரவணராஜாவிடம் நீதிச்சேவை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட நீதி அமைச்சர்,
தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி டி.சரவணராஜாவிடம் நீதிச்சேவை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
அவரது குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் நீதி சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முல்லைத்தீவு மற்றும் கொக்குத்தொடுவாயில் பகுதிகளுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலகம், செயலாளர், அதிகாரிகள் மற்றும் அவருடன் அருகில் பணியாற்றிய எவருக்கும் தமக்கு மரண அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
நீதிபதி டி.சரவணராஜா வழங்கியுள்ள தீர்ப்புகள் குறித்து பல வழங்குகள் நிலுவையில் உள்ளன. சட்டமா அதிபர் இவருக்கு எவ்வித அழுத்தங்களை கொடுக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு நோயாளியை பார்வையிட செல்ல நீதிபதி டி.சரவணராஜா விடுமுறை கோரிக்கை கடிதத்தையும் வழங்கியுள்ளார். ஆகவே, அவர் விடுமுறையின் போர்வையிலேயே சென்றுள்ளார்.
அவரது இராஜினாமா கடிதத்தை நீதிசேவை ஆணைக்குழு இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.