தக்காளி பாஸ்தா
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10124
மாலையில் குழந்தைகள் பசியோடு இருந்தால், அப்போது அவர்களின் வாய்க்கு சுவையாக வித்தியாசமாக ஏதேனும் செய்து கொடுக்க நினைத்தால், தக்காளி பாஸ்தா செய்து கொடுங்கள். அதிலும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அருமையான சுவையில் தக்காளி பாஸ்தா செய்யலாம்.சரி, இப்போது அந்த தக்காளி பாஸ்தாவை எப்படி ஈஸியாக செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 3 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கி வேக வைத்தது)
தக்காளி - 2 (அரைத்தது)
பூண்டு - 2-3 பற்கள்
இஞ்சி - 1 இன்ச்
பச்சை மிளகாய் - 1-2
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் பாஸ்தாவை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து விட்டு, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் கேரட்டை சேர்த்து நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் சாம்பார் பொடி, தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், தக்காளி பாஸ்தா ரெடி!!!