இஸ்ரேல் விவகாரத்தில் தலையிடவேண்டாம் என ‘ஹெஸ்புல்லா’ அமைப்புக்கு மக்ரோன் நேரடி அறிவுறுத்தல்!
21 ஐப்பசி 2023 சனி 08:10 | பார்வைகள் : 5492
இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரத்தில் தலையிடவேண்டாம் என ஹெஸ்புல்லா (Hezbollah) அமைப்பிடம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவுறுத்தியுள்ளார்.
ஹெஸ்புல்லா அமைப்பிடம் நேரடியாக இந்த அறிவுறுத்தலை வழங்கியதாக ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார். பிரெஞ்சு தூதரகம் ஊடாக ஹெஸ்புல்லா அமைப்பிடமும், லெபனானின் அதிகாரிகளிடமும் இந்த அறிவுறுத்தலை வழங்கியதாக ஜனாதிபதி மக்ரோன் நேற்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டார்.
ஹெஸ்புல்லா என்பது லெபனானில் உள்ள ஒரு சியா இஸ்லாமிய அரசியல் கட்சியாகும். அத்தோடு அவர்கள் ஆயுத பயிற்சி பெற்றவர்களையும் கொண்ட அமைப்பாகும். ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹெஸ்புல்லா அமைப்பு களமிறங்கினால் பெரும் விவகாரமாக மாறும் அபாயம் எழுந்துள்ளதால், அவர்கள் விடயத்தில் தலையிடவேண்டாம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.