காசாவுக்கு பயணம் மேற்கொண்ட ஐ.நா.பொதுச் செயலாளர்
21 ஐப்பசி 2023 சனி 08:11 | பார்வைகள் : 3859
ஐ.நா வின் பொதுச் செயலாளர் அண்டனியோ குத்தேரஸ் 20.10.2023 எகிப்து-காசா எல்லைப் பகுதியான ரஃபா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் காசா மக்களுக்கு உதவுவதற்காக வந்திறங்கிய நிவாரணப் பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
200 கனரக வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்டு ரஃபா எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தது,
நிவாரணப்பொருட்களை விநியோகிக்க முடியாதவாறு இஸ்ரேல் தாக்குதல்களை நிகழ்த்தி வந்தமையால் நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதற்காக தாக்குதல்களை நிறுத்துமாறு ஐ.நா இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்தியுள்ளது.
இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில் காசா பகுதிக்கு இந்த நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் என ஐ.நா வின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
மேலும், எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி யினால் போரில் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்கள் தொடர்பாக ஒரு அமைதி மாநாடு ஒன்றும் இன்று (21) கெய்ரோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் இத்தாலியின் பிரதமர் மெலோனி, கிரீஸ் பிரதமர் கிரியா கோஸ், பிரான்சின் வெளியுறவு அமைச்சர் கேத்தரின், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் இந்த மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக எகிப்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம் என்று சீன அரசும் அறிவித்துள்ளது.