எள்ளு வெல்ல லட்டு
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10508
அனைவருக்குமே இனிப்பு பண்டங்களில் லட்டு நிச்சயம் பிடிக்கும். இந்த லட்டுவில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோருக்கு பிடித்த லட்டு என்றால் அது திருப்பதி லட்டு. ஆனால் அந்த திருப்பதி லட்டு போன்றே எள்ளு கொண்டு செய்யப்படும் லட்டும் மிகவும் சுவையாக இருக்கும். பெரும்பாலும் இந்த லட்டுகளை கர்நாடகாவில் பண்டிகையன்று அதிகம் செய்வார்கள்.
இந்த லட்டுகளை சாப்பிட வேண்டுமென்று ஆசையாக உள்ளதா? அப்படியானால் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியான செய்முறையைத் தான் கொண்டுள்ளது. சரி, இப்போது அந்த எள்ளு வெல்ல லட்டுவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள்ளு - 1 கப்
வெல்லம் - 1 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடி செய்தது)
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளை போட்டு தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு, வெல்லப் பாகுவை ரெடி செய்ய வேண்ம்.
பாகு நன்கு கெட்டியாகும் போது, அதில் வறுத்து வைத்துள்ள எள்ளு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, நெய்யை சேர்த்து கிளறி, இறக்கி வைக்க வேண்டும்.
இறுதியில் கலவையானது ஓரளவு சூடாக இருக்கும் போதே, அதனை லட்டுகளாக பிடிக்க வேண்டும். குறிப்பாக லட்டு பிடிக்கும் போது, கையில் லேசாக தண்ணீரால் நனைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதனை காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், லட்டானது 10-15 நாட்கள் நன்றாக இருக்கும்.