Paristamil Navigation Paristamil advert login

அகிலேஷ் கோபத்தால் 'இண்டியா' கூட்டணி உடைகிறது?: பி.டி.ஏ., வெல்லும் என்ற பதிவால் பரபரப்பு

அகிலேஷ் கோபத்தால் 'இண்டியா' கூட்டணி  உடைகிறது?: பி.டி.ஏ., வெல்லும் என்ற பதிவால் பரபரப்பு

23 ஐப்பசி 2023 திங்கள் 09:12 | பார்வைகள் : 1610


மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாத காங்கிரஸ் கட்சியை துரோகி என விமர்சித்து வந்த அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், 'இண்டியா' கூட்டணியை பற்றி குறிப்பிடாமல், '2024 தேர்தலை பி.டி.ஏ., வெல்லும்' என அவர் குறிப்பிட்டு இருப்பது, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 17ல் தேர்தல் நடக்கிறது.

இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சி, ம.பி.,யில் போட்டியிட தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்கும்படி காங்கிரசிடம் கேட்டது. 

இது தொடர்பாக ம.பி., சென்ற சமாஜ்வாதி தலைவர்கள், காங்., மூத்த தலைவர்களுடன் பல சுற்று பேச்சு நடத்தினர். அப்போது, ஆறு தொகுதிகளை சமாஜ்வாதிக்கு ஒதுக்குவதாக காங்., உறுதி அளித்தது. 

அதிருப்தி

இந்நிலையில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில், 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்., சமீபத்தில் அறிவித்தது. 

அதில், ஒரு தொகுதி கூட சமாஜ்வாதிக்கு ஒதுக்கப்படவில்லை. இது, அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை அதிருப்தி அடைய செய்தது. 

உடனே, ம.பி.,யில் போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளர்கள் பட்டியலை அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்தார். 

இதில், 18 தொகுதிகளில் காங்., வேட்பாளர்களுக்கு எதிராக சமாஜ்வாதி வேட்பாளர்களை அவர் நிறுத்தி உள்ளார். இது, இண்டியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக காங்.,குக்கு எதிரான விமர்சனங்களை அகிலேஷ் யாதவ் அதிரடியாக தெரிவித்து வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:

சட்டசபை தேர்தலில் கூட்டணி இல்லை என்பதை காங்., முன்கூட்டியே கூறியிருந்தால், தொகுதி பங்கீடு குறித்து பேச ஆட்களை அனுப்பி இருக்க மாட்டேன். 

காங்., இப்படி நடந்து கொண்டால், அவர்களுடன் கூட்டணியில் யாரும் இருக்க மாட்டார்கள்.

மூத்த காங்., தலைவர் வாயிலாக அக்கட்சியின் முக்கிய நபரிடம் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது. அவர் ஒரு விஷயத்தை கூறியிருந்தார். அதை மதித்து தான் ஆக வேண்டும். 

ஆனால், கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டால், எங்களை ஏன் அழைத்து பேசினீர்கள்?

எங்களுக்கு எதிராக சதி செய்வதையும், துரோகம் இழைப்பதையும் காங்., நிறுத்த வேண்டும். சமாஜ்வாதி வேண்டாம் என்றால் அதை நேரடியாக சொல்லி விடுங்கள்.

கூட்டணி பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, பா.ஜ.,வை எதிர்த்து தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் பணியில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக காங்., பேசுவது அதிசயமாக உள்ளது. இதே காங்கிரஸ் கட்சி நடத்திய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை அவர்கள் வெளியிடவில்லை. 

பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஓட்டுகள் இன்றி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை, அவர்கள் இப்போது தான் உணர்ந்துள்ளனர். அவர்கள் எதிர்பார்க்கும் ஓட்டு வங்கி அவர்களிடம் இல்லை என்பதை காங்., இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோபம்

இந்நிலையில், அகிலேஷ் யாதவின் விமர்சனம் குறித்து, ம.பி., - காங்., தலைவர் கமல்நாத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''அகிலேஷ் - விகிலேஷை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். இண்டியா கூட்டணியின் கவனம் முழுக்க லோக்சபா தேர்தல் மீது தான் உள்ளது,'' என, தெரிவித்தார்.

இந்நிலையில், காங்., கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவது, அகிலேஷ் யாதவை கொதிப்படைய செய்துஉள்ளது. அந்த கோபம், அவரது சமூக வலைதள பதிவில் நேற்று வெளிப்படையாக தெரிந்தது. 

அதில், சமாஜ்வாதி கட்சி கொடியின் சிவப்பு - பச்சை வண்ணத்தை முதுகில் பூசிக்கொண்ட தொண்டரின் உடம்பில், ஹிந்தியில் சில வாசகங்கள் எழுதப்பட்ட புகைப்படம் இடம் பெற்று இருந்தது. அந்த புகைப்படத்தை வெளியிட்டு, அதில் இருந்த வார்த்தைகளை, அதன் கீழே அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டு இருந்தார். 

அதன் விபரம்:

வரும் 2024 நம் இலக்கு. நம் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு அழிவே இல்லை. இந்த முறை, அகிலேஷ் யாதவின் வெற்றியை பி.டி.ஏ., உறுதி செய்யும். ஏழைகளுக்கு நீதி கிடைப்பதை நான் உறுதி செய்வேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது

பி.டி.ஏ., என்பதற்கு ஹிந்தியில், 'பிச்டே, தலித், அல்பசங்கியாஸ்' என பொருள். அதாவது, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் என அர்த்தம். 

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசை, இந்த பி.டி.ஏ., தோற்கடிக்கும் என்பதை இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், 'இண்டியா' கூட்டணி குறித்து அவர் குறிப்பிடாததால், கூட்டணி உடைந்துவிட்டதா என்ற கேள்வியையும் அரசியல் ஆர்வலர்கள் எழுப்ப துவங்கி உள்ளனர். அகிலேஷின் இந்த பதிவு, அரசியல் வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்