மிளகாய் பஜ்ஜி
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 11152
மழைக்காலத்தில் எப்போதும் சோர்வுடன் இருப்பது போன்றே இருக்கும். அதிலும் மாலை வேளை வந்தால் போதும், வீட்டிற்கு சென்றதும் தூங்கிவிட வேண்டுமென்று தான் தோன்றும். ஆனால் அப்படி மாலை வேளையில் தூங்குவது என்பது நல்லதல்ல. எனவே அப்போது தூக்கத்தை விரட்டும் வண்ணம் நல்ல காரசாரமாகவும், அதே சமயம் மொறுமொறுவென்றும் இருக்கும் ஸ்நாக்ஸை வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.
இங்கு அந்த மழைக்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற மிளகாயை பஜ்ஜியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பெரிய மற்றும் நீளமான மிளகாய் - 10
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 3 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, ஓமம் மற்றும் சாட் மசாலா சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் மிளகாயை நன்கு நீரில் கழுவி, பின் நன்கு உலர வைத்து, நீளவாக்கில் இரண்டாக கீறி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலை மாவில் மிளகாயை பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு 4-5 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மிளகாயையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான மிளகாய் பஜிஜி ரெடி!!!