இந்தியாவின் எதிர்ப்பை மீறி மீண்டும் இலங்கையில் நுழைந்த சீன கப்பல்
26 ஐப்பசி 2023 வியாழன் 10:39 | பார்வைகள் : 2966
இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான, 'ஷி யான் 6' நேற்று இலங்கை வந்தடைந்தது.
நம் அண்டை நாடான சீனாவுக்கு சொந்தமான, 'ஷி யான் 6' ஆராய்ச்சிக் கப்பல், பல நுாறு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும், செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் உடையது. <br><br>இந்தக் கப்பலை இலங்கைக்கு அருகே சர்வதேச கடற்பகுதியில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த, அந்நாட்டு அரசிடம் சீனா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது
ஆராய்ச்சி பணி
இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதற்கு அனுமதி தராமல் இலங்கை அரசு காலதாமதம் செய்து வந்தது. இந்நிலையில், ஷி யான் 6 கப்பல் நேற்று கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது. இதை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இந்தக் கப்பல், 17 நாட்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும் என சீன அரசு தெரிவித்திருந்தது. இலங்கையின் சர்வதேச கடற்பகுதியில் இருந்து தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, துாத்துக்குடி உள்ளிட்ட ஆறு துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து தகவல்களை சேகரிக்க முடியும்.
எதிர்ப்பு
இதனாலேயே ஷி யான் 6 கப்பலை, அங்கு நிறுத்த இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு சீனா உதவியதை அடுத்து, அந்நாட்டுக்கு உதவும் வகையில் ஆராய்ச்சிக் கப்பல் நிறுத்த அந்நாடு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன நாட்டு கப்பல்களான, 'ஹை யாங் 24' மற்றும் 'யுவான் வாங் 5' ஆகியவற்றிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் எதிர்ப்பை மீறி, இலங்கை அரசு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது மூன்றாவதாக ஆராய்ச்சிக் கப்பலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.