அவகாசம் கேட்ட மஹுவா மொய்த்ரா.. முன்கூட்டியே விசாரணைக்கு அழைக்க நெறிமுறைக் குழு முடிவு..?

28 ஐப்பசி 2023 சனி 12:31 | பார்வைகள் : 5061
தனது தொகுதியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் நவம்பர் 4 ஆம் தேதி முடிந்தவுடன் உடனடியாக குழுவின் முன் ஆஜராக உள்ளதாக மஹுவா மொய்த்ரா எம்.பி. கூறியிருக்கிறார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு துபே கடிதம் எழுதியிருந்தார்
மக்களவைக்கு கேள்விகளை நேரடியாக பதிவிடுவதற்காக, நாடாளுமன்ற இணையதளத்தை பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தர்ஷன் ஹிராநந்தனிக்கு மஹுவா மொய்த்ரா வழங்கியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புகார் மீது, மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்துகிறது. வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நெறிமுறைக்குழு அதிகாரப்பூர்வமாக தனக்கு சம்மன் அனுப்புவதற்கு முன்பாகவே ஊடகங்களில் வெளியிட்டதை காரணம் காட்டி, வேறொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதனால் விசாரணை தேதி தள்ளி வைக்கப்பட்டது.
தனது தொகுதியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் நவம்பர் 4 ஆம் தேதி முடிந்தவுடன் உடனடியாக குழுவின் முன் ஆஜராக உள்ளதாக மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார். ஆனால், நவம்பர் 2 ஆம் தேதியே ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நெறிமுறைக் குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.