பிரபல நடிகையை திருமணம் செய்யபோகிறாரா விஷால்?
9 ஆவணி 2023 புதன் 14:25 | பார்வைகள் : 4941
நடிகர் விஷால் எந்த படத்தில் நடித்தாலும் அவருக்கு நாயகியாக நடிப்பவர்களுடன் இவர் காதல் வயப்பட்டுள்ளார் என்பது போன்ற செய்திகள் வெளியாவது வழக்கம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், நடிகை லக்ஷ்மி மேனன். இவர் திரையுலகிற்கு வந்த போது அவருக்கு வயது, 16. சுந்தர பாண்டியன், கும்கி போன்ற படங்களில் நடித்து வந்த புதிதிலேயே பலரையும் தன்வசப்படுத்தினார். விஷாலுடன் 2013ஆம் ஆண்டு ‘பாண்டிய நாடு’ படத்திலும் 2014ஆம் ஆண்டு ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் இணைந்து நடித்தார். இவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்கள் பலருக்கு பிடித்துப்பாேனது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒரு முத்தக்காட்சி இடம் பெற்றிருந்தது. இதில் இவர்கள் உண்மையாகவே முத்தம் காெடுத்துக்கொண்டதால் இவர்களுக்குள் காதல் மலர்ந்து விட்டதாக ரசிகர்கள் கருதினர். ஆனால் இதுகுறித்து இருவருமே வாய்திறக்கவில்லை.
லக்ஷ்மி மேனன் காதல் சர்ச்சைகளுக்கு பிறகு விஷாலுடன் படங்களில் நடிக்கவில்லை. இவரையடுத்து, நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷமியை காதலிப்பதாக பேச்சு அடிப்பட்டது. இவர்கள் ‘நல்ல நண்பர்கள்’ என வெளியில் சொல்லி கொண்டாலும் காதல் சர்ச்சைகளை மறுக்கவில்லை. இதையடுத்து நடிகர் சங்க பிரச்சனையால் வரலக்ஷமியின் அப்பாவை விஷால் திட்டித்தீர்க்க, பதிலுக்கு அவரும் காரசாரமாக பேசினார். இதனால் இவர்களுக்குள் இருந்த “நட்பு” முறிந்து பாேனது. தற்போது நடிகர் விஷால் தனது முன்னாள் காதலியை கரம் பிடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
நடிகை லக்ஷ்மி மேனன், கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக படங்களில் நடிப்பதில்லை. ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர், இப்போது ஏனோ தமிழ் சினிமாவை விட்டு ஒரு அடி தள்ளியே நிற்கிறார். இவருக்கு விஷாலுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகியதாகவும், தற்போது அவர்களது நட்பே காதலை வளர்க்க உதவியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், லக்ஷ்மி மேனனும் விஷாலும் அவரவர் வீட்டாரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சம்பந்தப்பட்ட இரு நடிகர்களுமே வாய் திறக்காமல் உள்ளனர்.
நடிகர் சங்க வேலைகள், நடிப்பு என படு பிசியாக உலா வருகிறார் விஷால். காதல்-ஆக்ஷன் போன்ற மசாலா கதைகளிலேயே நாயகனாக நடித்து வந்த அவர், துப்பறிவாளன் கதை மூலம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கடைசியாக அவர் நடித்திருந்த ‘லத்தி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. விஷாலை காவல் அதிகாரி கதாப்பாத்திரத்திலேயே பார்த்து ரசிகர்களுக்கு போர் அடித்து விட்டதால் அந்த படம் ஏனோ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. தற்போது அவர், ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படம், தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக உள்ளது.