மொபைல் பயன்பாட்டினால் மூளைக் கட்டி ஏற்படும் அபாயம்...?
18 பங்குனி 2024 திங்கள் 11:53 | பார்வைகள் : 2868
மூளையின் செல்களில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சி மூளை கட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டிகள் மூளை திசுக்களிலிருந்தே (பிரைமரி ட்யூமர்ஸ்) தோன்றலாம் அல்லது உடலின் மற்ற பகுதிகளுக்கு (மெட்டாஸ்டேடிக் ட்யூமர்ஸ்) பரவலாம்.
ஆண்டுதோறும் பல்வேறு வயதினரை பாதிக்கும் மூளை கட்டிகளின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2020-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இந்தியர்களிடையே 10-வது மிகவும் பரவலான கட்டியாக மூளை கட்டிகள் இருக்கின்றன. IARC (International Association of Cancer Registries) தரவுகளின் படி, இந்தியாவை பொறுத்த வரை ஆண்டுதோறும் 28,000-க்கும் மேற்பட்ட மூளைக் கட்டி பாதிப்புகள் பதிவாகின்றன. மேலும் இந்த பாதிப்பு காரணமாக சுமார் 24,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஆண்டு தோறும் பதிவாவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 40,000 முதல் 50,000 நபர்களுக்கு மூளை கட்டி பாதிப்பு கண்டறியப்படுகிறது. இதில் சுமார் 20% குழந்தைகள் சம்பந்தப்பட்டவை.
ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆதித்யா குப்தா பேசுகையில், மூளை கட்டி இருக்குமிடம், அதன் அளவு மற்றும் வளரும் வேகம் உள்ளிட்ட அனைத்தும் அதன் அறிகுறிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். தலைவலி, நினைவாற்றல் பிரச்சினைகள், கவனம் செலுத்துவதில் சிக்கல் அல்லது ஆளுமையில் அசாதாரணங்கள், மன செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை சில பொதுவான அறிகுறிகளாகும். தவிர இரட்டை அல்லது மங்கலான பார்வை, முகம் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை அல்லது பலவீனம், சமநிலை பிரச்சினைகள், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவையும் மூளையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
மூளையில் கட்டிகள் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் அறியப்படவில்லை என்றாலும் மரபியல், கதிர்வீச்சுக்கு வெளிப்படுவது மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உள்ளிட்ட பல காரணிகள் இந்த பாதிப்பை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.
தற்காலத்தில் சிறு குழந்தைகள் கூட ஸ்மார்ட் ஃபோனை அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில், மொபைல் பயன்பாட்டிற்கும், மூளைக் கட்டிகளுக்குமான தொடர்பு குறித்து உலகளவில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூளையில் கட்டிகள் ஏற்படுவதற்கும், மொபைல் பயன்பாட்டிற்கும் தொடர்பு இருக்க கூடும் என்று விஞ்ஞான அடிப்படையில் ஒரு வலுவான சந்தேகம் உள்ளது.
மேலும் வழக்கமான மாடலானது temporal lobe-ன் ஒரு வீரியம் மிக்க க்ளியோமா ஆகும், இது ( temporal lobe) மொபைல் ஃபோன் பயன்பாட்டின் போது மிக அருகில் இருக்கும் மூளை பகுதியாகும். இதனிடையே இது தொடர்பான 1982 முதல் 2013 வரையிலான 30 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வில், எதிர்பாராதவிதமாக கடந்த 2003-க்கு பிறகு (மொபைல் போன் பயன்பாடு அதிகரித்த காலம்) மூளை கட்டியின் அதிக நிகழ்வுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மொபைல்களில் இருந்து வெளிவரும் எலக்ட்ரோ மேக்னட்டிக் ரேடியேஷன் மூளைக் கட்டிகளை ஏற்படுத்துகிறது என எந்த ஒரு குறிப்பிட்ட ஆய்வு அல்லது ஆராய்ச்சியும் காட்டவில்லை. எனினும் எப்போது பார்த்தாலும் மொபைலை பயன்படுத்துவது நமது பொது ஆரோக்கியத்தில் எதிர்மறை விளவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிறார் டாக்டர் குப்தா.
மீண்டும் மீண்டும் அடிக்கடி தலைவலி ஏற்படுவது, மருந்து எடுத்தாலும் குறையாத தலைவலி, பல நாட்களாக நீடிக்கும் மங்கலான பார்வை, காதில் விசில் போன்ற சத்தம் கேட்பது, தலைசுற்றல் அல்லது மயக்கம் போன்ற எந்தவொரு நாள்பட்ட அறிகுறிகளையும் மக்கள் புறக்கணிக்காமல் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த அறிகுறிகள் மூளை கட்டியின் முக்கிய அறிகுறியாக இருக்க கூடும்.