Paristamil Navigation Paristamil advert login

குடும்ப ஆட்சியும் ஊழலும் தான் தி.மு.க.,வுக்கு முக்கியம்: ராஜ்நாத் சிங்

 குடும்ப ஆட்சியும் ஊழலும் தான் தி.மு.க.,வுக்கு முக்கியம்: ராஜ்நாத் சிங்

17 சித்திரை 2024 புதன் 00:54 | பார்வைகள் : 519


தி.மு.க.,வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாயப்பில்லை. தமிழக மக்களுக்கு பா.ஜ., மட்டுமே துடிப்பான கட்சியாக இருக்கிறது" என, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

கிருஷ்ணகிரி பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

மொபைல் போன் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில் அதிக மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாதுகாப்பு தேவைக்காக நம் நாட்டிலேயே தேவையானவற்றை இன்று நம்மால் தயாரிக்க முடிகிறது.

பாதுகாப்புத் தளவாடங்களை இறக்குமதி செய்யப்பட்ட நாடாக அறியப்பட்ட நாம், இன்று பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் 25 இடங்களில் இருக்கிறோம்.

ஐ.என்.எஸ்., விக்ராந்த் போன்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை நம் நாட்டிலேயே செய்து வருகிறோம். 2014ல் 600 கோடியாக இருந்து பாதுகாப்பு ஏற்றுமதி இன்று 21 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

5ஜி இணைப்பு உள்ள சில நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறி உள்ளது, 6ஜி சேவைக்கான ஆயத்தங்களை பிரதமர் மோடி துவக்கியுள்ளார். 2014ல் 20 சதவீதமாக இருந்த பிராட்பேண்ட் சேவை இன்று 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்று எளிய மக்களாலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்த முடிகிறது. இது பெரிய மாற்றமாகும். இதனால் மக்களின் பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் கிராமப்புற சாலைகள் இணைக்கப்பட்டு, புதிய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 2014ல் 74 ஆக இருந்து விமான நிலையங்களின் எண்ணிக்கை இன்று 124 ஆக அதிகரித்துள்ளது.

2014ல் 7 ஆக இருந்த எயம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை இன்று 22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களிடம் ஓட்டுகளைப் பெறுவதற்காகவோ, ஆட்சி அமைக்கவோ நாங்கள் அரசியல் செய்யவில்லை.

நாட்டைக் கட்டி எழுப்பவே அரசியல் செய்கிறோம். இரு பாதுகாப்பு வழித்தடங்களை உத்தரபிரேதசத்திலும் தமிழகத்திலும் உருவாக்கியுள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு அப்பாற்பட்டது கட்சி என்பதை பா.ஜ., நிரூபித்துள்ளது

இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் நல்ல முதலீடுகள் வருகின்றன. 1.25 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இளைஞர்கள் துவங்க வாய்ப்பளித்த அரசு, மோடி அரசு. நாட்டில் உள்ள மக்கள்தொகை பெரும்பான்மையான இளைஞர்களை சார்ந்துள்ளது.

வேலை தேடும் இளைஞர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை தரும் இளைஞர்களாக அவர்களை மோடி அரசு மாற்றியுள்ளது. தமிழகத்தை பழமையான சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கிறது தி.மு.க., ஒட்டுமொத்த தி.மு.க.,வும் குடும்ப அரசியலைத் தவிர வேறொன்றும் இல்லை.

தி.மு.க.,வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாயப்பில்லை. தமிழக மக்களுக்கு பா.ஜ., மட்டுமே துடிப்பான கட்சியாக இருக்கிறது.

அண்ணாமலை விரும்பியிருந்தால் தி.மு.க.,- அ.தி.மு.க.,வில் சேர்ந்து பெரிய பதவியில் இருந்திருப்பார். தமிழகத்தின் எதிர்காலம் தொடர்பாக இளைஞர்களை இணைக்கும் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

தமிழகத்துக்கு குடும்ப ஆட்சியையும் ஊழலையும் மட்டுமே தி.மு.க., கொடுத்துள்ளது. தேசம் தான் முதலில் என பா.ஜ., சொல்கிறது. அவர்களோ, குடும்பம் தான் முதலில் என்கின்றனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு டில்லியில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை அனுப்புகிறது, இந்த பணமும் தி.மு.க.,வின் ஊழலுக்கு தான் போகிறது. நான் தமிழகம் வரும்போதெல்லாம் ஜெயலலிதாவின் ஞாபகம் வரும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாங்காற்றியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க., தலைவராக ஜெயலலிதா இருந்தாலும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்