Paristamil Navigation Paristamil advert login

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாணுக்கு முன்னர் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாணுக்கு முன்னர் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை

21 சித்திரை 2024 ஞாயிறு 10:48 | பார்வைகள் : 322


பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபியில் எதிர்வரும் 25ஆம் திகதி தகுதிகாண் சுற்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகுதிகாண் சுற்றில் 10 நாடுகள் இரண்டு குழுக்களில் விளையாடவுள்ளதுடன்  இலங்கை மகளிர் அணியும் தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

மகளிர் ரி 20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஸ்கொட்லாந்து, தாய்லாந்து, உகண்டா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, வனாட்டு, ஸிம்பாப்வே ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.

லீக் சுற்று முடிவில் இந்த இரண்டு குழுக்களிலும் முதல் இடத்தைப் பெறும் இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலகக் கிண்ண பிரதான சுற்றில் பங்பற்ற தகுதிபெறும்.

இந்த பத்து அணிகளும் தகுதிகாண் சுற்று ஆரம்பமாவதற்கு முன்னர் இன்று ஞாயிற்றுக்கிழமையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளன.

ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சிப் போட்டிகளில் விளையாடும்.

இலங்கை தனது முதலாவது பயிற்சிப் போட்டியில் நெதர்லாந்தை இன்று பிற்பகல் எதிர்த்தாடவுள்ளது. அப்போட்டி பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நெதர்லாந்துக்கு எதிராக 2013இல் நடைபெற்ற மகளிர் ரி20 உலக்க கிண்ண தகுதிகாண் சுற்றின் அரை இறுதிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 33 ஓட்டங்களால்  இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

இலங்கை தனது 2ஆவது பயிற்சிப் போட்டியில் வனாட்டுவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளது. இந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளும் அபு தாபி டொலரன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும்.

இது இவ்வாறிருக்க, தென் ஆபிரிக்காவில் இருவகையான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் மகளிர் கிரிக்கெட் தொடர்களை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை, மிகுந்த நம்பிக்கையுடன் தகுதிகாண் சுற்றை எதிர்கொள்ளவுள்ளது.

தென் ஆபிரிக்காவுடனான ரி20 தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்ட இலங்கை மகளிர் அணி, தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமரி அத்தபத்துவின் சாதனைமிகு ஆட்டம் இழக்காத 195 ஓட்டங்களின் உதவியுடன் 1 - 1 என சமப்படுத்தியது.

இந்த இரண்டு தொடர்களிலும் இலங்கை மகளிர் அணியினர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிகளை ஈட்டியது போல மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலும் ஜமாய்க்கும் என நம்பப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்