Paristamil Navigation Paristamil advert login

பாரிஸ் ஒலிம்பிக் : குறுந்தூர ஓட்டங்களில் தங்கத்துக்கு குறிவைத்துள்ள பொட்ஸ்வானா வீரர் டிபோகோ

பாரிஸ் ஒலிம்பிக் : குறுந்தூர ஓட்டங்களில் தங்கத்துக்கு குறிவைத்துள்ள பொட்ஸ்வானா வீரர் டிபோகோ

24 சித்திரை 2024 புதன் 04:12 | பார்வைகள் : 217


ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கத்துக்கு குறிவைத்துள்ளதாக பொட்ஸ்வானாவின் குறுந்தூர ஓட்ட நட்சத்திர வீரர் 20 வயதான லெட்சைல் டிபோகோ தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குறுந்தூர ஓட்டத்தில் தங்கம் வென்ற முதலாவது ஆபிரிக்கர் என்ற வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டும் குறிக்கோளுடன் பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக அவர் கூறினார்.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

அவரது ஆபிக்கக் கண்ட வீரர்களைப் பொறுத்தமட்டில் மத்திய மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளிலேயே வெற்றிவாகை சூடியுள்ளனர். ஆனால் அவர்கள் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் சாதித்ததில்லை.

புடாபெஸ்டில் நடைபெற்ற 2023 உலக மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற பின்னரே டிபோகோ, ஒலிம்பிக் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு முயற்சிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

'நான் மிகவும் போற்றும் யுசெய்ன் போல்டை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறேன்' என்றார் அவர்.

2007க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் 8 தங்கப் பதக்கங்களையும் 11 உலக சம்பியன் பட்டங்களையும் சுவீகரித்த யுசெயன் போல்ட் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்.

'நான் விரும்பி பின்பற்றும் யுசெய்ன் பொல்ட் சாதித்துள்ளவை அற்புதமானது. அவர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றியபோதெல்லாம் தொலைக்காட்சியில் கண்டு களிப்பேன். அனைவரும்  யுசெய்ன்  போல்டை நினைவில் வைத்திருக்கின்றனர். நான் ஓய்வுபெறும்போது அவர்கள் என்னையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்' என ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு கரையில் உள்ள ஒரிகொன் பல்கலைக்கழக மெய்வல்லுநரான டிபோகோ தெரிவித்தார்.

20 வயதுடைய மிகவும் இளமையான டிபோகொ சாந்தமும் அடக்கமும் கொண்டவர்.

'அனைத்துகாலத்திலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என நான் எண்ணவில்லை. ஆனால், முதல் மூன்று இடங்களில் இருந்தால் அதுவே பெரிய விடயம்' என பொட்ஸ்வானா தலைநகர் கபோரோனிலிருந்து 68 கிலோ மீட்டர் தொலையில் கண்யே என்ற நகரில் வளர்ந்துவந்த டிபோகோ கூறுகிறார்.

குறுந்தூர ஓட்டப் போட்டிகளை ஆபிரிக்க விளையாட்டு வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான  நேரம் கணிந்துள்ளது' என்றார் அவர்.

புடாபெஸ்டில் நடைபெற்ற 2023 உலக சம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 9.88 செக்கன்களில் ஓடிக்கடந்த டிபோகோ வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அப் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கம் வென்றிருந்தார்.

200 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் நோவா லைல்ஸ் வெற்றிபெற்றதுடன் மற்றொரு அமெரிக்கரான எரியொன் நைட்டன் 2ஆம் இடத்தைப் பெற்றார். அப் போட்டியில் டிபோகோ வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி வரலாற்றில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஆபிரிக்கர் ஒருவர் முதல் 3 இடங்களுக்குள் வந்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

அத்துடன் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் போட்ஸ்வானாவைச் சேர்ந்த ஒருவர் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றதும் இதுவே முதல் தடவையாகும்.

அவரது தாயார் சேராட்டிவாவும் முன்னாள் மெய்வல்லுநராவார். புடாபெஸ்டில் டிபோகோ போட்டியிட்டபோது அவருக்குத் தெரியாமலே அவரது தாயார் அங்கு சென்று மகனை உற்சாகப்படுத்தி இருந்தார்.

தனது உணர்வுகள் பற்றி பின்னர் கருத்து வெளியிட்ட சேராட்டிவா, 'நான் பதட்டமாக இருந்தேன். தோல்வி அடைவதற்கு பயப்படுவதாலேயே பதட்டம் ஏற்படும். பதற்றம் அடைந்தால் தகுதிநீக்கம் செய்யப்படவும் நேரிடலாம். அல்லது தசை இழுப்பு ஏற்படும். பதற்றப்படாமல் போட்டியிட்டால் வெற்றிபெறலாம்' என்றார்.

அதேவேளை, 'மன அழுத்தம் ஏற்பட்டால் ஒருபோதும் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற முடியாது. பங்குபற்றினாலும் வேகமாக ஓடமுடியாது. நான் சாந்தமாக இருப்பதற்கு பாரம்பரிய இசைக்கு செவிமடுப்பேன்' என டிபோகோ தெரிவித்தார்.

இந்தளவு நம்பிக்கை உடைய லெட்லை டிபோகோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதித்து வரலாறு படைப்பார் என நம்புவோமாக.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்