இளையராஜாக்கு 'மஞ்சும்மெல் பாய்ஸ்' தயாரிப்பாளரின் அதிரடி பதில்..!
24 வைகாசி 2024 வெள்ளி 10:17 | பார்வைகள் : 1507
இசைஞானி இளையராஜா தனது பாடலை பயன்படுத்தியதற்காக காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் அந்த நோட்டீசுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரைப்படமான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் மிகப்பெரிய அளவில் வசூலை வாரி குவித்தது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்தது.
குறிப்பாக இந்த படத்தின் வெற்றிக்கு கிளைமாக்ஸ் காட்சியில் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதும் அதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இசைஞானி இளையராஜா, ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தில் தனது பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த நோட்டீஸில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தில் இருந்து ‘குணா’ பாடலை நீக்க வேண்டும் அல்லது பாடலுக்கான உரிமை பணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ தயாரிப்பாளர் விளக்கம் அளித்த போது ’கண்மணி அன்போடு’ உரிமம் பெற்றே பயன்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் இளையராஜாவிடம் இருந்து இன்னும் நோட்டீஸ் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.