Paristamil Navigation Paristamil advert login

“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி”

“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி”

30 ஆடி 2024 செவ்வாய் 10:03 | பார்வைகள் : 670


ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் படி, ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த தினமான ஜூலை 18ஆம் திகதியை “சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக” ஐக்கிய நாடுகள் சபை 2010ஆம் ஆண்டு தொடக்கம் கொண்டாடி வருகின்றது.

மனிதத்துவம் நோக்கிய அவரது அர்ப்பணிப்பு, மோதல், முரண்பாடு சம்பந்தமான தீர்வுகள், பாலின சமத்துவம், குழந்தைகளுக்கான உரிமைகள், பாதிக்கப்பட்ட குழுக்களுக்கான நலன்களில் அக்கறை செலுத்துதல், அவரது 67 வருட பொதுச் சேவையைக் கௌரவித்தல்,  இன்னும் அவரது  இன்னோரன்ன செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டு, அவற்றை அங்கீகரிக்கும் முகமாக ஐ.நா. சபை இத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது எனலாம்.

இவர் சமூக நீதி, ஆண்-பெண் சம உரிமை,  மனித உரிமை மேம்பாடு,  இனங்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தல், வறுமைக்கு எதிரான போராட்டம், கலாசார ரீதியான பன்முகத்தன்மை, நிலச் சீர்திருத்தம், சுகாதார முறைகளை மேம்படுத்தல்,  போன்றவற்றில்  தன்னை முழுமையாக அர்ப்பணித்ததன் காரணமாக,  இவர் உலகளாவிய ரீதியில் இன்றும் போற்றப்படும் ஓர் உன்னதமான தலைவராகக் கருதப்படுகின்றார்.

அவர் தனது வாழ்க்கையை மனித உரிமை சட்டத்தரணியாக, போராளியாக, சிறைக் கைதியாக, சர்வதேச சமாதான ஏற்பாட்டாளராக,  சுதந்திரத் தென்னாபிரிக்காவின்  ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக விளங்கினார்.

தென்னாபிரிக்க விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து,  அங்கிருந்து கொண்டே  தென்னாபிரிக்காவின் விடுதலைக்காக, நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்.

சட்ட விதிகள்,  பேச்சுச் சுதந்திரம் , சுதந்திரமானதும்,   நேர்மையானதுமான தேர்தல் முறை ஆகியவற்றை அந்த நாட்டு மக்களுக்கு நெல்சன் மண்டேலா  அறிமுகப்படுத்தினார்.
“சமாதானம் இல்லாமல் நீதி இல்லை”,  “இன நல்லிணக்கம் இல்லாமல் ஜனநாயகம் இல்லை”, என்ற கருத்தை முன்வைத்து தனது செயற்பாட்டை மேற்கொண்டவர்.

உலகளாவிய ரீதியில் வாழ்ந்த கறுப்பின மக்கள் அவரைச் சுதந்திரப் போராட்ட வீரர் என வர்ணித்துக் கொண்டிருந்த பொழுது,  தென்னாபிரிக்க வெள்ளையர் அரசாங்கமோ அவரைப் பயங்கரவாதியாகச் சித்தரித்தது.

ஐக்கிய அமெரிக்காவை ஆபிரகாம் லிங்கன் எவ்வாறு  ஒற்றுமைப்படுத்தினாரோ,  அதேபோல, நெல்சன் மண்டேலா பிளவுபட்டிருந்த தனது நாட்டை ஒற்றுமைப்படுத்தினார்.
உலகின் பலம் வாய்ந்த ஆயுதங்களை விட, மன்னிப்பு , விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை,  மற்றவர்களை மதிப்பது என்பனவே பலம் வாய்ந்த ஆயுதங்களெனக் கருதினார்.

“நேர்மையான மனிதனாக ஒருவர் வாழ வேண்டு மென்றால், அதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் நெல்சன் மண்டேலா எனவும் ஒருவர்  நிலை குலையாத உறுதி,  தைரியம்,  வீரம்,  அமைதி,  புத்திசாலித்தனம்,  திறமை ஆகியவற்றைக்  கொண்ட மனிதனாக இருக்க வேண்டுமென்றால் அதற்குச் சிறந்த  உதாரணமாக இருந்தவர் நெல்சன் மண்டேலா” என கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்டிருந்தார்.

தலைவனே ஒரு நாட்டின் அடையாளம்,  அவனுக்கே சமூகத்தின் தேவைப்பாடுகள் தெரியும் என்பதனை நன்கு அறிந்தவர்.

நாட்டின் நன்மைக்காக சில வேளைகளில் தலைவன் சில தற்றுணிபானத் தீர்மானங்களை எடுப்பது அவசியமெனக் கருதினார்.

தனது ஐந்து வருட ஜனாதிபதிப் பதவிக் காலம் நிறைவுற்றதுவும்  கெளரமாகவும், மரியாதையாகவும், தனது பதவியை  ஏனையவர்களுக்குக் கையளித்து விட்டு , அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டார். 

அவருடைய ஆதரவாளர்கள் அவரை மீளவும் தலைமைத்துவப் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தும்,  அவர் அதனை நிராகரித்து  விட்டார். “எனது  வெற்றிகளின்  மூலம்  என்னை  மதிப்பிடாதீர்கள்,  எத்தனை முறை நான்  கீழே   விழுந்து  மீண்டும்  எழுந்தேன்  என்பதன்  மூலம்  மதிப்பிடுங்கள்” என்று குறிப்பிடுகின்றார். இது எம்மனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு கருத்தாகும். 

ஆம்! நாம் ஒவ்வொருவரும்  வாழ்வில் முன்னேறி வருவதற்கு எத்தனையோ தடைகள், அவமானங்கள், கஷ்டங்கள், வேதனைகள், துன்பங்கள், துயரங்கள் போன்றவற்றைக் கடக்க வேண்டியுள்ளது. 

இவ்வாறு கடந்து இறுதியிலேயே நாம் வெற்றியடைய முடிகின்றது. இதுவே யதார்த்தம். எனவே, இவரது வாழ்வியல் வரலாறு எமக்கு ஒரு நல்ல பாடமாக அமைகின்றது. இவரது நூலான 
“Long Walk to Freedom”,  அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாக அமைகின்றது.  தற்போதைய தென்னாபிரிக்க  ஜனாதிபதி சிரில் ராமபோச 2019ஆம் ஆண்டு இலங்கைக்கூடாக வெளிநாடொன்றுக்குச் செல்லும் பொழுது ,   அவரை சந்தித்து, அளவளாவும் வாய்ப்பொன்று  எனக்கு கிடைத்தது. 

அத்தருணத்தில்  முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாப் பற்றி, நாம் இருவரும் சம்பாஷித்தது இன்றும் என் மனக் கண் நிழலாடுகிறது.

அனைத்து நாட்டுத் தலைவர்களும். நெல்சன் மண்டேலாவது  செயற்பாடுகளைப் பின்பற்றினால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பது ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு.

நன்றி தமிழ் Mirror

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்