Paristamil Navigation Paristamil advert login

தேசிய தேர்வு ஏஜென்சி முகமை மாற்றி அமையுங்கள்

தேசிய தேர்வு ஏஜென்சி முகமை மாற்றி அமையுங்கள்

3 ஆவணி 2024 சனி 03:17 | பார்வைகள் : 601


தேர்வு முறையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'சைபர்' பாதுகாப்பில் உள்ள தவறுகளை கண்டறிந்து வினாத்தாள் கசிவை தடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்வு நடைமுறையை ஆராய்ந்து, தேசிய தேர்வு ஏஜன்சியை முழுமையாக மாற்றி அமைக்க பரிந்துரைக்கும்படி, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்மட்ட கமிட்டிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வில், வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., 15க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறது.


தள்ளுபடி


இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யவும், மறுதேர்வு நடத்தவும் கோரிதாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த மாதம் 23ல் தள்ளுபடி செய்தது. தேர்வை ரத்து செய்ய மறுத்ததற்கான காரணம் குறித்து, நேற்று விளக்கம் அளித்தது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பரவலாகவும், திட்டமிட்டும் நடக்கவில்லை. பீஹாரின் பாட்னா மற்றும் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் ஆகிய இடங்களில் மட்டுமே வினாத்தாள் கசிந்துள்ளன.

இதனால், தேர்வின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக கூற முடியாது. எனவே தான், இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டோம்.

நீட் தேர்வில் இந்தாண்டு சில முறைகேடுகள் நடந்துள்ளன. அடுத்தாண்டும் இது போன்ற தவறுகள் நடக்காமல், முறையாக தேர்வு நடப்பதை மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமின் பின்பக்க கதவுகள் திறக்கப்பட்டு, தேர்வுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் வினாத்தாள்களை அணுக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது, பாதுகாப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதையும், இந்த விஷயத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


கூரியர் வாயிலாக


ஒரு சில மையங்களுக்கு வினாத்தாள், 'இ - ரிக் ஷா'க்களில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் சில மையங்களுக்கு தனியார் கூரியர் நிறுவனங்கள் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்றவற்றை தடுக்க, 'சைபர் செக்யூரிட்டி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.

வினாத்தாள்களை தயாரிப்பது, சரிபார்ப்பது போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதுடன், கடுமையான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்வதில் கூடுதல் கவனம் தேவை. பூட்டப்பட்ட வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் இவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அதை மேலும் சிறப்பானதாக்க மாற்றங்களை பரிந்துரைக்க, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஏழு பேர் அடங்கிய குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டி, தன் அறிக்கையை செப்., 30க்குள் மத்திய கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அமைச்சகம் இரண்டு வாரங்களில் இணக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


மாற்ற பரிந்துரை


நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தேர்வு முறையை வலுப்படுத்தி, நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்குவது குறித்து ராதாகிருஷ்ணன் குழு பரிசீலிக்க வேண்டும்.

தேர்வு நடைமுறையை ஆராய்ந்து, தேசிய தேர்வு ஏஜன்சியை முழுமையாக மாற்றி அமைக்க பரிந்துரை அளிக்க வேண்டும்.

நாடு முழுதும் மிக முக்கியமான போட்டி தேர்வை நடத்தும் என்.டி.ஏ., போன்ற ஒரு அமைப்பு, தவறான முடிவுகளை எடுத்துவிட்டு, பின்னர் அதை திருத்துவதாக கூறக்கூடாது; முடிவை எடுப்பதற்கு முன், அதை நன்கு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு!

தேர்வின் புனிதத்தன்மை கெடவில்லை என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது, மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. தேர்வுக்கு எதிரான திட்டமிடப்பட்ட பிரசாரங்களை முறியடித்துள்ளது.முறைகேடற்ற, வெளிப்படையான, தவறுகளற்ற தேர்வு முறை வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நிபுணர் குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட உடன், அவற்றை செயல்படுத்துவோம்.தர்மேந்திர பிரதான்மத்திய கல்வி அமைச்சர்

ஊழலுக்கு முற்றுப்புள்ளி

ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., உறுப்பினர் முகமது அப்துல்லா, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தனிநபர் மசோதா தாக்கல் செய்தார். அப்போது, மத்திய சுகாதார அமைச்சர் நட்டா கூறியதாவது:நீட் தேர்வுக்கு முன், மருத்துவ கல்வி, பணம் கொட்டும் தொழிலாக இருந்தது. ஒரு சீட் 8 - 13 கோடி ரூபாய் வரை விலை போனது. நீட் தேர்வுக்கு பின் தான், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

என்.டி.ஏ., வசூல் ரூ.3,500 கோடி

மத்திய கல்வி இணையமைச்சர் சுகந்தா மஜும்தார், ராஜ்யசபாவில் கூறியதாவது:தேசிய தேர்வு முகமையின் மொத்த வருவாய் 3,514 கோடி ரூபாய். இதில், தேர்வுகள் நடத்துவதற்காக 3,065 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 2021 - 22ல், 490 கோடி ரூபாயாக இருந்த வருவாய், 'க்யூட்' தேர்வு அறிமுகமான பின், 2022 - 23ல் 873 கோடி ரூபாயாக உயர்ந்தது. தேர்வு கட்டணம் வாயிலான வருவாயால், தேர்வு முகமை, பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்