மாங்காய் சாதம்
1 புரட்டாசி 2024 ஞாயிறு 11:36 | பார்வைகள் : 598
பொதுவாகவே மாங்காயில் ஊறுகாய், வற்றல் போன்றவை செய்வோம் அதுமட்டுமின்றி, இதை நாம் சாம்பார், புளி குழம்பு, மீன் குழம்பு போன்றவற்றிலும் சேர்ப்பது வழக்கம். சில சமயங்களில், இதை குழம்பாக கூட சில வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால், மாங்காயில் அதிகமாக சாதம் செய்ய மாட்டோம்.
எனவே, இன்றைய கட்டுரையில், வெறும் பத்தே நிமிடத்தில் மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று தான் நாம் பார்க்க போகிறோம்.
மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் - 2 கப்
மாங்காய் - 1 (துருவியது)
காய்ந்து மிளகாய் - 4
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவ
செய்முறை :
முதலில் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு போட்டு நன்கு பொரிக்கவும். பிறகு அதில் காய்ந்த மிளகாய் கடலை பருப்பு, வேர்க்கடலை, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அவை ஓரளவு பொரிந்தவுடன் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். பின் அதில் துருவிய மாங்காயை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு மீண்டும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு முறை கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக வடித்து வைத்துள்ள சாதத்தை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான மாங்காய் சாதம் ரெடி. இந்த சாதத்துடன் நீங்கள் உருளைக்கிழங்கு ப்ரை, காளான் பிரை ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.