'அந்தகன்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தாரா நடிகர் பிரஷாந்த்!
10 ஆவணி 2024 சனி 11:38 | பார்வைகள் : 988
பலர் நடித்து 2018ல் ஹிந்தியில் வெளிவந்த படம் 'அந்தாதுன்'. சுமார் 30 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 450 கோடியை வசூலித்த படம். அப்படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் இயக்கியுள்ளார் தியாகராஜன்.
ஒரிஜனல் ஹிந்திப் படத்தைப் பார்த்தவர்களும் ரசிக்கும் விதத்தில் சினிமாத்தனம் இல்லாமல் ஒரு யதார்த்தமான பாணியில் திரைக்கதை அமைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார். ஒரிஜனல் ஹிந்திப் படத்தைக் காப்பியடித்து அதிலிருந்து சில காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் சிலர் இதற்கு முன்பே அவரவர் படங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது இந்த ஒரிஜனல் ரீமேக்கைப் பார்த்த பிறகு பலருக்குப் புரியும்.
பிரசாந்த் பார்வையற்ற ஒரு பியானோ இசைக் கலைஞர். சிலருக்கு பியானோ கற்றுக் கொடுக்கும் வகுப்புகளை எடுப்பவர். ஒரு சிறிய சாலை விபத்தில் அவருக்கும், பிரியா ஆனந்திற்கும் பழக்கம் ஏற்படுகிறது. பிரியாவும், அவரது அப்பாவும் நடத்தி வரும் 'பார்' ஒன்றில் இரவு நேரத்தில் பியானோ வாசிக்கச் செல்கிறார் பிரசாந்த். நடிகராகவே இருக்கும் கார்த்திக் உடன் அங்கு பழக்கமாகிறது. தனது திருமண நாளுக்காக வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் ஆக பியானோ வாசிக்க வேண்டும் எனக் கேட்கிறார். மறுநாள் கார்த்திக் வீட்டிற்குச் செல்கிறார் பிரசாந்த். அவரை வரவேற்கும் கார்த்திக்கின் மனைவி சிம்ரன், கார்த்திக் ஊரில் இல்லை என்று சொல்கிறார். இருந்தாலும் வீட்டிற்குள் செல்லும் பிரசாந்த் அங்கு கார்த்திக் கொலை செய்யப்பட்டிருப்பதையும், உள்ளே சமுத்திரக்கனி இருப்பதையும் பார்க்கிறார். பிரசாந்திற்குப் பார்வை தெரியாது என நினைக்கும் சிம்ரன், சமுத்திரக்கனி ஆகியோர் கார்த்திக்கின் உடலை அப்புறப்படுத்துகிறார்கள். பார்வை தெரியாத பிரசாந்த்திற்கு பார்வை தெரியுமா என நமக்கு அதிர்ச்சி ஏற்பட அடுத்தடுத்து சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம். பார்வை நன்றாகத் தெரிந்தவர் பார்வையற்றவர் போல நடிப்பதும், தான் பார்வையற்றவர் என்பதை மற்றவர்கள் நம்பும்படியாக நடிப்பதும் ஒரு சவாலான விஷயம்தான். எந்த ஹீரோயிசமும் இல்லாத ஒரு கதாபாத்திரம். பணம் சம்பாதித்து லண்டன் செல்ல வேண்டும் என்பதே புதுச்சேரியில் வசிக்கும் பியானோ கலைஞர் பிரசாந்த்திற்கு லட்சியமாக இருக்கிறது. பிரியாவின் நட்பு கிடைத்து அங்கிருந்து கொஞ்சம் காதலாக மாறும் கதை, அதன்பின் சில கொலைகளால் பரபரப்பான த்ரில்லர் ஆக நகர்கிறது. பின் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சீரியஸ் என நிதானமாக பயணிக்கிறது. கார்த்திக் கொல்லப்பட்டு கிடக்கும் போது, சிம்ரன் பிரசாந்தை கொல்ல வரும் போது அந்தப் பதட்டத்தை நமக்கும் கடத்துகிறார் பிரசாந்த். அவருக்கு சினிமாவில் ஏற்பட்ட இடைவெளியை இந்த அந்தகன் சரி செய்யும்.
படத்தில் பிரசாந்திற்கு ஜோடி பிரியா ஆனந்த் என்றாலும், கதாநாயகி என்று பார்த்தால் சிம்ரன் தான். ஒரு காலத்தில் பிரசாந்த் - சிம்ரன் ஜோடி வெற்றிகரமான காதல் ஜோடியாக சில படங்களில் வாகை சூடியது. 'பார்த்தேன் ரசித்தேன்' படத்தில் தனக்குக் கிடைக்காமல் போகும் பிரசாந்த் மீது சைக்கோத்தனமாக நடந்து கொள்வார் சிம்ரன். அது போல இந்தப் படத்தில் தான் செய்த கொலையை பிரசாந்த் தெரிந்து கொண்டுவிட்டார் என்பதை அறிந்து ஏறக்குறைய ஒரு சைக்கோ போலவே நடந்து கொள்கிறார். வில்லித்தனமான நடிப்பும் தனக்கு வரும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சிம்ரன்.
பிரசாந்த் மீது பரிதாபப்பட்டு அவருக்கு ஒரு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்து, காதல் கொண்டு பின் சந்தேகத்தில் பிரிபவராக பிரியா ஆனந்த். கிளாமர் ஆடையில் ரசிகர்களை கிறங்க வைக்கிறார். சிம்ரனின் கள்ளக் காதலனாக சமுத்திரக்கனி. அந்தத் திருட்டுப் பார்வையும், பதட்டமும் அவரது கதாபாத்திரத்தைப் பேச வைத்துள்ளது. கார்த்திக் கொஞ்ச நேரமே வந்து இறந்து போகிறார். அவர் வரும் காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் இளையராஜா பாடல்களும் இனிமை சேர்க்கிறது. வனிதா விஜயகுமார் ஒரு சில காட்சிகளில் வந்து கோபப்பட்டுப் போகிறார்.
ஊர்வசி, யோகி பாபு முதலில் வந்து பின் காணாமல் போய்விட்டார்களே என்று யோசித்தால், மீண்டும் வந்து சில காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார்கள். கிட்னியைத் திருடும் மோசடி டாக்டராக கேஎஸ் ரவிக்குமார்.
பியானோ இசைக்கலைஞர்தான் படத்தின் கதாநாயகன் என்பதால் படத்தின் ஆரம்பத்தில் நிறைய பியானோ இசைக் காட்சிகள் வருகின்றன. பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் பியானோவை வாசித்துத் தள்ளியிருக்கிறார். ரவி யாதவ்வின் ஒளிப்பதிவு கதையின் ஊடே இணைந்து பயணிக்கிறது. புதுச்சேரி கதைக்களத்தில் ஒரு யதார்த்தப் பார்வை உள்ளது.
கொலைகள், த்ரில்லர் என கதையில் இருப்பதால் ஏதோ ஒரு 'சைக்கோ' படம் போல இருக்குமோ என்ற எண்ணம் தேவையில்லை. அப்படியெல்லாம் சினிமாத்தனமாக பயமுறுத்தாமல் நிஜமாக நடந்தால் எப்படியிருக்குமோ அப்படியான காட்சிகள், கதாபாத்திரங்களுடன் படம் நகர்கிறது. சில காட்சிகள் சினிமாத்தனமாக இருந்திருக்கலாமோ என்றும் கேள்வி எழும். ஹிந்திப் படத்துடன் ஒப்பிடுபவர்களுக்கு குறைகள் தெரியலாம்.