2026 சட்டசபை தேர்தலுக்காக அண்ணாமலைக்கு அமித்ஷா அசைன்மென்ட்!
12 ஆவணி 2024 திங்கள் 03:24 | பார்வைகள் : 331
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை மாற்றப் போவதாக பேச்சு எழுந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கான 'அசைன்மென்ட்'டை, அவரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ., பின்பற்றிய பாணியை தமிழகத்திலும் பின்பற்றுவதுடன், அ.தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளும் வகையில் வியூகம் வகுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் போட்டியிட்ட கூட்டணி, 18 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஆனாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அதனால், தோல்விக்கு பொறுப்பேற்று, தன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, கட்சித் தலைவர் நட்டாவிடம் அண்ணாமலை கடிதம் கொடுத்தார்; அவர் அதை ஏற்கவில்லை.
எதிர்கால திட்டம்
இருப்பினும், மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற தகவல் கசிந்து, பூதாகரமாக சுழன்றது.
அதற்கேற்ப, 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக, லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கு அண்ணாமலை மூன்று மாதங்கள் செல்ல உள்ளதாகவும், அதனால், இடைக்கால தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு தரப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், மேலிட அழைப்பில் டில்லி சென்ற அண்ணாமலையிடம், தமிழகத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் நிறைய கருத்துகளை அமித் ஷாவும், கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும் பகிர்ந்துள்ளனர்.
அதில் முக்கியமானது, 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ள வேண்டும் என்பதே. இதற்கு, தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ., பின்பற்றிய பாணியை பின்பற்றும்படியும் வலியுறுத்தியுள்ளனர்.
அதாவது, சில மாதங்களுக்கு முன் தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., பாரத் ராஷ்ட்ரீய சமிதி, பா.ஜ., என, மும்முனை போட்டி நிலவியது.
இந்தப் போட்டியில், அங்கே அசுர சக்தியாக வளர்ந்து ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்ட்ரீய சமிதி, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. பா.ஜ., இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது; அத்துடன், 14 சதவீத ஓட்டுகளை பெற்றது.
மேலிட உத்தரவு
அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் ஓட்டு சதவீதத்தை இரு மடங்காக்க வேண்டும் என, உள்ளூர் தலைவர்களுக்கு பா.ஜ., மேலிடம் கட்டளையிட்டது.
அதை ஏற்ற உள்ளூர் தலைவர்கள் மிகக் கடுமையாக களத்தில் பாடுபட்டனர். இதனால், 33 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றது. மொத்தமுள்ள 17 இடங்களில், எட்டு இடங்களையும் பிடித்தது.
இந்த தேர்தலிலும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. சொந்த மாநிலத்திலேயே அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதே மாதிரியான சூழல் தமிழகத்திலும் உள்ளது. பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய அ.தி.மு.க., தனி அணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது.
இருப்பினும், பெரும்பாலான ஓட்டு வங்கியை பா.ஜ.,விடம் இழந்ததுடன், 25 சதவீதத்திற்குள் சுருண்டது.
தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்திலும், சில தொகுதிகளில் பெரும் சரிவு கண்டு மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது.
அ.தி.மு.க.,வின் இந்த சரிவை வாய்ப்பாக பயன்படுத்தி, 2026 சட்டசபை தேர்தலுக்குள், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை, பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு இழுக்க வேண்டும். இதைச் செய்தால், பா.ஜ., கூட்டணியின் ஓட்டு வங்கி எளிதாக, 30 சதவீதத்தை கடந்து விடும்.
இதன் வாயிலாக அ.தி.மு.க.,வை தமிழகம் முழுதும் மூன்றாம் இடத்திற்கு தள்ள வேண்டும்.
மக்கள் நலத்திட்டம்
அதற்கு தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றுவதுடன், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தெலுங்கானாவில் கட்சியினர் எப்படி செயல்பட்டு, பா.ஜ.,வை முன்னேற்றினர் என்பதை முழுமையாக அறிந்து, அதை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்றும், அண்ணாமலையிடம் அமித் ஷாவும், நட்டாவும் கூறியுள்ளனர்.
இந்த விஷயங்களை சமீபத்தில் திருப்பூரில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளிடம் தெரிவித்த அண்ணாமலை, அனைவரும் மேலிட உத்தரவுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும் என்று முடுக்கி விட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.