ஐரோப்பாவில் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
12 ஆவணி 2024 திங்கள் 10:05 | பார்வைகள் : 1360
இளம் வயதினரின் உயிருக்கு உலை வைக்கும் மிக ஆபத்தான காய்ச்சல் ஒன்று ஐரோப்பாவில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Sloth fever என பரவலாக அறியப்படும் இந்த விசித்திர தொற்று நோய் தொடர்பில் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மூட்டு விறைப்பு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கியூபா மற்றும் பிரேசில் நாடுகளில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட இந்த காய்ச்சலானது தற்போது தடுக்க முடியாத வகையில் பரவி வருவாதாக குறிப்பிடுகின்றனர்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஐரோப்பாவில் 19 பேர்களுக்கு குறித்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் 12 பேர்களுக்கும் இத்தாலியில் ஐவருக்கும் ஜேர்மனியில் இருவரும் sloth காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் வெளிறிய தொண்டை கொண்ட slothsகளிலிருந்து உருவாகிறது. முதன்மையாக கொசுக்கள் உட்பட பூச்சி கடித்தால் பரவுகிறது என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
கியூபாவில் இருந்து திரும்பிய 26 வயது பெண் ஒருவர் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் திடீரென்று பாதிக்கப்பட்டார். இத்தாலியை சேர்ந்த 45 வயது நபரும் கியூபாவில் இருந்து நாடு திரும்பிய நிலையிலேயே காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
பிரேசில் நாட்டில் 21 மற்றும் 24 வயதுடைய இரு பெண்கள் sloth காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். காய்ச்சலை அடுத்து கடுமையான வயிற்று வலி, இரத்தப்போக்கு மற்றும் ஆபத்தான குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றால் அவதிப்படு, பின்னர் இருவரும் மரணமடைந்துள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஜிகா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் வகையை சேர்ந்த இந்த காய்ச்சலுக்கும் தடுப்பூசி இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில்,
நாம் நிச்சயமாக கவலைப்பட வேண்டும். நாளுக்கு நாள் சூழல் மாறிக்கொண்டே இருப்பதால், நம்மால் தடுக்க முடியாத நிலை ஏற்படலாம் என்றார். இந்த வைரஸ் முன்னர் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் முழுவதும் பல நாடுகளில் பதிவாகியுள்ளது.
2024ல் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, பெரு மற்றும் சமீபத்தில் கியூபாவிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. கியூபாவுக்கு சுற்றுலா சென்ற ஐரோப்பிய நாட்டவர்கள் 18 பேர்களுக்கும் பிரேசில் சென்று திரும்பிய ஒருவருக்கும் நோய் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசில், பொலிவியா, பெரு, கொலம்பியா மற்றும் கியூபா நாடுகளில் மட்டும் ஜனவரி முதல் ஜூலை வரையில் 8,000 பேர்களுக்கு sloth காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், பாதிப்பு மிகுந்த பகுதிகளில் தங்கியிருப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றே ஐரோப்பிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் ஐரோப்பிய மக்கள் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர்.