என்னை சந்திக்க வர வேண்டாம்; நானே வருகிறேன்: தொண்டர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்
1 ஐப்பசி 2024 செவ்வாய் 03:19 | பார்வைகள் : 668
துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்து சொல்ல, அவரது அரசு குடியிருப்பான குறிஞ்சி இல்லத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் குவிந்து வருகின்றனர். இதையடுத்து, தன்னை சந்திக்க நேரில் வருவதை தவிர்க்குமாறு, கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டு முன், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இதனால், அங்கு எப்போதும் கூட்டம் காணப்படுகிறது. அந்தப்பகுதி முழுதும், உதயநிதியை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களும் அதிகம் காணப்படுகின்றன.
அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்கள். எம்.பி.,க் களும், உதயநிதியை சந்தித்து வாழ்த்துச் சொல்ல வருகின்றனர். திரையுலக பிரமுகர்களும் வரிசைக்கட்டி வந்து செல்கின்றனர். இதற்கிடையில், மாவட்ட வாரியாக கட்சியினர் திரண்டு வர உள்ள தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதை தவிர்க்க வேண்டும் என, உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
துணை முதல்வராக பொறுப்பேற்ற பின், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.
முதல்வரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில், நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி, கட்சி பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என்னை சந்திப்பதற்காக, சென்னைக்கு பயணம் செய்வதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்.
பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து, உங்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.