ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அனுமதி இல்லை: அரசை விளாசிய ஐகோர்ட்
2 ஐப்பசி 2024 புதன் 03:40 | பார்வைகள் : 610
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில், 'பொறுமையை சோதிக்க வேண்டாம்' என எச்சரித்த உயர் நீதிமன்றம், 'குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதி, வேறு மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி, மாற்று கொள்கை உடைய கட்சி அலுவலகங்கள் இருக்கும் பகுதி என்று காரணம் கூறி அனுமதி மறுக்கக் கூடாது' என, அரசுக்கும், போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
விஜயதசமியை ஒட்டி, வரும் 6ம் தேதி, தமிழகம் முழுதும் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு அனுமதி அளிக்கக் கோரி, அந்தந்த மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் சார்பில், போலீசாருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
நிராகரிப்பு
இம்மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், ''ஊர்வலத்துக்கு, 42 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; 16 இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
''ஒரு மாவட்டத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. அதுபோன்ற இடங்களில் நிராகரிக்கப்பட்டுஉள்ளது,'' என்றார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'நேர கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை, போலீசார் விதித்துள்ளனர். அரசும், போலீசும் கண்ணாமூச்சி ஆடுகின்றனர்' என்றனர்.
இதையடுத்து, 'நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்' என எச்சரித்த நீதிபதி, ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை கூறி, அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
'ஒரு மாவட்டத்தில், ஒரு இடத்துக்கு மேல் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது எனும்போது, பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில் பல இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது?' என, நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.
மறுக்கப்பட்ட இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விதித்த நிபந்தனைகளை மறுஆய்வு செய்து தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன் வாதாடியதாவது:
ஏற்கனவே 42 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மேலும் 10 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொரட்டூர், மாங்காடு, கோவை மாவட்டம் ரத்தினபுரியில், ஆர்.எஸ்.எஸ்., பொதுக்கூட்டத்தை தனியார் பள்ளிகளின் வளாகங்களில் நடத்த, நிர்வாகங்கள் அனுமதிக்கவில்லை.
கோவை மாவட்டம் ரத்தினபுரியில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் உள்ள வடவள்ளியில் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாலும், சேலையூரில், போக்குவரத்து உள்ள பிரதான சாலையில் அனுமதி கேட்பதாலும், அனுமதி வழங்கவில்லை. குலசேகரப்பட்டினம் தசரா விழா காரணமாக, துாத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் அனுமதி அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு, கடந்த ஆண்டும் இதுபோல் வழக்கு தொடரப்பட்டது. அனுமதி வழங்க நிபந்தனைகள் விதித்து, டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்தார்.
இரு தரப்பினரையும் கேட்டு, அணிவகுப்புக்கு அனுமதி வழங்க நிபந்தனைகள் விதித்து, விரிவான உத்தரவை, இந்த நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனாலும், அந்த உத்தரவை போலீசார் இந்த ஆண்டு பின்பற்றவில்லை.
புதிய நிபந்தனைகளை விதிப்பது, நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
கொரட்டூர், மாங்காடு, ரத்தினபுரியில், வளாகங்களில் பொதுக்கூட்டம் நடத்த பள்ளி நிர்வாகங்கள் அனுமதித்தால், அதன்படி போலீசாரும் அனுமதி அளிக்க வேண்டும். மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்தால், மாற்று இடத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
சேலையூர் அருகே சிட்லபாக்கத்தில், கடந்த ஆண்டு அணிவகுப்பு நடந்துள்ளதால், இப்போது அனுமதி அளிக்க வேண்டும். சாயர்புரத்தில், வரும் 20ம் தேதி அணிவகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதால், அதற்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும்.
நம்புகிறேன்
குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் இருக்கும் பகுதி; பிற மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி; மாற்று கொள்கை உடைய கட்சி அலுவலகங்கள் இருக்கும் பகுதி என காரணங்களை கூறி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கும், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி மறுக்கக் கூடாது.
பொது மக்களுக்கானது தான் பொது சாலை; அதில் யார் செல்ல வேண்டும் என்பதை, தனி நபர்கள் முடிவு செய்ய முடியாது. நீதிமன்றம் ஏற்கனவே வகுத்த நிபந்தனைகள், வழிமுறை களை பின்பற்றி, வரும் காலங்களில் அனுமதி அளிக்க வேண்டும். புதிய நிபந்தனைகளை விதிக்கக் கூடாது. எதிர்காலத்தில், இதுபோன்ற வழக்குகள் வராது என நம்புகிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.